ரி.ஆர்.ரி வானொலியின் சமூகப்பணி பற்றிய, ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் அதிருப்பதி – வன்னி பா உ . சிவசக்தி ஆனந்தன்
வவுனியா
06.12.2013
பணிப்பாளர்
ரி.ஆர்.ரி தமிழொலி வானொலி
பிரான்ஸ்
அன்புடையீர்,
புலம்பெயர் உறவுகளின் உதவிகளைக் கொச்சைப்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தாங்களும் தங்களது ஊழியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் போரினால் பாதிப்புக்குள்ளாகி வடக்கு-கிழக்கில் வாழும் எமது மக்கள் தமது துயரங்களை ஓரளவிற்காவது மறந்து, இருக்கின்ற உயிர்களைக் காப்பதற்கும் தமது வாழ்வாதாரங்களைப் பெருக்கிக் கொள்வதற்கும் ரீ.ஆர.ரீ வானொலியினூடாக புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் உதவிகளை வழங்கி வருகின்றீர்கள். அதற்கு முதலில் பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
‘காய்த்தமரமே கல்லடி படும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப உங்களின் அரிய சேவைகளைக் கண்டு சகிக்க முடியாத எம்மினத்தைச் சேர்ந்த ஒருவரே உங்கள்மீதும் உங்களது தன்னலமற்ற சேவையின்மீதும் சேறுபூசுவதுடன் உங்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பாலமாக இருந்து உங்களால் வழங்கப்படுகின்ற உதவிகளை உரியவர்களிடம் கொண்டு சேர்க்கும் எங்கள்மீதும் சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை எமக்கு மிகுந்த ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் அளிப்பதுடன் மனச்சோர்வையும் ஏற்படுத்துகின்றது.
அல்லல்படும் மக்களின் கோரிக்கைகளை உங்களிடம் முன்வைப்பதுடன் எங்களது பணி முடிவடைந்துவிடுகின்றது. அதன் பின்னர் களப்பணியாளர்கள் விண்ணப்பதாரிகளின் வீடுகளுக்கு நேரிடையாகச் சென்று அவர்களின் வாழ்க்கை முறையை நேரில் கண்டறிந்து உங்களுடன் நேரில் தொடர்புகளை ஏற்படுத்தி நீங்களும் அவர்களை நேரிடையாகவே செவ்விகண்டு அவர்களின் தேவைகளை இனங்கண்டு தங்களது வானொலியினூடாக அவர்களுக்குத் தேவையான உதவியை வழங்குவதற்கான நிதியை உங்களது நேயர்களினூடாகப் பெற்று எங்களுக்கு அனுப்பி வைக்கின்றீர்கள். நாங்கள் உங்களது பிரதிநிதிகளாக உங்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று அந்நிதியையோ அல்லது அவர்களுக்குத் தேவையான உபகரணங்களையோ வழங்குகின்றோம். உதவி பெற்றவர்களிடமிருந்து அதற்கான பற்றுச்சீட்டையும வாங்கி உங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம். இதில் எந்த இடத்திலும் மோசடி நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
குறித்த நபரான ஜெர்மனியைச் சேர்ந்த திரு.சிறிகுமரன் அவர்களது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எதுவித பிரதிபலனையும் எதிர்பாராத புலம்பெயர் உறவுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், உங்களது நற்பண்புகளுக்கும் கலங்கம் ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது. கொடையாளருக்கும் பயனாளிகளுக்கும் பாலமாக இருந்து செயலாற்றும் எமது நற்பெயருக்கும் குந்தகம் விளைவிப்பதாக அவரது பழிச்சொற்கள் அமைந்துள்ளன. அவரது செயலால் பயன்பெற்றவர்களும் நாங்களும் மிகவும் மனச்சோர்வு அடைந்துள்ளோம். இனியாவது அவர் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் இருப்பதற்குத் தாங்கள் அறிவுரை கூறவேண்டும் அல்லது அவர்மீது சட்ட நடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.
என்றும் மக்கள் சேவையில்,
ந.சிவசக்தி ஆனந்தன்
பாராளுமன்ற உறுப்பினர்
வன்னி மாவட்டம்