ரிஷாத் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் த.தே.கூ. நடுநிலைமை வகிக்க வேண்டும் – சிவாஜிலிங்கம்
அமைச்சர் றிசாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளரும் முன்னாள் பாராளுமன்றம் மற்றும் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அமைச்சர் றிசாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவு எவ்வாறு இருக்கவேண்டும் எனக் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
இஸ்லாமிய அடிப்படை வாத தாக்குதலுக்குப் பின்னரான சூழ்நிலையில் அமைச்சர் றிசாட் பதியுதீன் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் முஜீபுர் ரஹ்மான் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவர்கள் மீது விசாரணை நடத்தப்படவேண்டும்.
இதுவரையில் வாக்குமூலம் பெறப்படவில்லை என்றால் அரசாங்கம் எங்குப் போகின்றது. இஸ்லாமிய அடிப்படை வாதிகளுடன் தொடர்புடையவர்களை அழைத்துச் சென்றார் என்றால் ஏன் விசாரணைக்குப்படுத்த முடியாது.
தமிழ் மக்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளிலே அவர் ஈடுபட்டிருக்கின்றார். அவருடைய பணம் செல்வாக்கினைப் பயன்படுத்தி தமிழ் மக்களைத் துன்புறுத்துகின்ற வகையிலே அவருடைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இதேபோன்று குறுகிய அரசியல் நலன்களுக்காக அவருடைய கட்சி வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்து வருகின்றது. இந்தச் சூழ்நிலையின் பின்னணியிலே அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது சிங்களப் பௌத்த அமைப்புக்களும் அதேபோன்று கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்தப் பின்னணியில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருகின்றார்கள். ஆனால் இதனை மத ரீதியாக இன ரீதியாகச் சிறுபான்மையினர் ஒருவருக்கான நடவடிக்கையா இல்லையா என்பதை யோசிக்கவேண்டியுள்ளது.
குறிப்பாக குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை விசாரணைக்கு அழைக்கமுடியும் என்றால் இதேபோன்று விடுதலைப்புலிகள் மீது போர் நடைபெற்றபோது பல பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கை அரச படைகள் விசாரணை செய்யமுடியும் என்றால் ஏன் குறித்த சம்பவங்களில் தொடர்புடைய இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை இந்த அரசாங்கம் மீது ஆழமான சந்தேகம் உள்ளது. குற்றஞ்சாட்டப்படுபவர்கள் நிரபராதியாக இருக்கமுடியும். ஆனால் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் குற்றவாளிகளா நிரபராதியா என்று முடிவெடுக்கவேண்டும்.
இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் தொடர்பு இல்லை என்றால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பதவி நிலைகளில் உள்ளவர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்து விசாரணைக்குப் பின்னர் நிரபராதி என்றால் தமது பதவிகளை மீளவும் பெற்றுக்கொள்ளமுடியும். இவர்கள் இதனைத் தாமாகவே செய்யவேண்டும்.
இதேவேளை அமைச்சர் ரிசாட்பதியுதீன் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை வருகின்றபோது அரசாங்கத்திற்கு முண்டுகொடுப்பதைப் போன்று அமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை வருகின்றது என்று நினைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எக்காலம் கொண்டும் அந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கக்கூடாது.
ஆதரவாக வாக்களிப்பதா இல்லையா என்பது பற்றிப் பரிசீலிக்கவேண்டும். ஆனால் அமைச்சர் ரிசாட்பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கூட்டமைப்பு ஆதரிப்பதன் மூலம் தமிழ் முஸ்லிம் உறவுகள் முறியக்கூடிய அல்லது பின் தள்ளக்கூடிய சூழ்நிலைகளை ஆராயவேண்டும். ஆகவே இத்தகைய பிரச்சினைகளில் நடுநிலையாக நிற்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து எக்காரணம் கொண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்குத் துணைபோக முடியாது என்றார்.