ரியல் மெட்ரிட் கால்பந்து கழகத்தின் இடைக்கால பயிற்சியாளராக சன்டியாகோ சொலாரி நியமனம்!

ரியல் மெட்ரிட் கால்பந்து கழகத்தின் பயிற்சியாளர் ஜூலன் லோபெட்டிகுய், பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக முன்னாள் வீரரும் மேலதிக பயிற்சியாளருமான சன்டியாகோ சொலாரி, அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்ஜன்டீனாவின் முன்னாள் வீரரான சன்டியாகோ சொலாரி, கடந்த 2000ஆம் மற்றும் 2005ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ரியல் மெட்ரிட் அணிக்காக விளையாடியவர் ஆவார்.

இவர், ரியல் மெட்ரிட் கால்பந்து கழக அணிக்கு அடுத்து வரும் நான்கு போட்டிகளுக்கு பயிற்சியாளராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்பெயின் கால்பந்து சம்மேளன விதிகளின்படி நிரந்த பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க கழகங்களுக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது என்பது நினைவுக்கூரத்தக்கது.

தொடர் தோல்விகளில் இருந்து ரியல் மெட்ரிட் கால்பந்து கழகத்தை மீட்டெடுக்கும் ஓர் முன்னேற படியாக ஜூலன் லோபெட்டிகுய்யை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கியதாக ரியல் மெட்ரிட் இயக்குனர் சபை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து ரியல் மெட்ரிட் இயக்குனர் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“கழகத்துடனான ஜூலன் லோபெட்டிகுய்யின் ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டது. ரியல் மெட்ரிட் குழாத்திற்கு இடையில் அபரிமிதமான வேறுபாடுகள் இருப்பதாக சபை உணர்கிறது” என கூறப்பட்டுள்ளது.

ரியல் மெட்ரிட் கால்பந்து கழகத்தின் பயிற்சியாளர் ஜூலன் லோபெட்டிகுய் அந்தக் கழகத்திற்கான தனது முதல் பருவத்தின் மூன்றாவது மாதத்திலேயே பதவி நீக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய சம்பியனான ரியெல் மெட்ரிட் அணி, ஸ்பெயினின் தனது பலம்மிக்க போட்டி அணியான பார்சிலோனாவிடம் வார இறுதியில் தோல்வியை சந்தித்த நிலையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !