ராஜீவ் கொலை வழக்கு – தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகனின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி அவரின் போராட்டம் வேலூர் மத்திய சிறையில், இன்று (வியாழக்கிழமை) ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது.

உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவரும் முருகனிடம், சிறைத்துறை அதிகாரிகள் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், எனினும் அதனை அவர் மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 28 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும், தன்னையும் தன் மனைவி நளினியையும், விடுதலைச் செய்யக்கோரி முருகன், கடந்த மாதம் 30 ஆம் திகதி தமிழக ஆளுநரிடம் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு மீது இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்காமையால் மன உளைச்சலுக்குள்ளான முருகன், சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக, அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 20 ஆம் திகதியும் முருகன் முன்விடுதலைக் கோரி, இதுபோன்று உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !