ராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும் – ஜே.வி.பி.

மோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை வழங்குவதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய நபர்கள் சிலர் குற்றவாளிகள் எனக் கடந்தகால ஆணைக்குழு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

எனவே இந்த அரசாங்கம் அவர்களைத் தண்டித்து முன்னுதாரணமாக செயற்பட்டுகாட்ட வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்களது ஆதரவு இந்த அரசாங்கத்திற்கு கிடைக்கும்.

அத்துடன், விசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகின்றன.

இதன்போது அது எதிர்காலத்தில் அமைக்கப்படும் ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கு மட்டுமே பொருந்துமா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்” என சுனில் ஹந்துநெத்தி மேலும் குறிப்பிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !