‘ராகுல் காந்தி- குரோஷியா; மோடி– பிரான்ஸ்’: கால்பந்து அணியுடன் ஒப்பிட்ட சிவசேனா

21-வது பிபா உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ், 2-ம் இடம் பிடித்த குரோஷிய அணியுடன் பிரதமர் மோடியையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் ஒப்பிட்டு சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. சீனிவாஸ் இன்று கொண்டுவந்தார். அதன் மீது நடந்த விவாதத்தில் அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் பேசினர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, தன்னைச் சிறுபிள்ளையாக மோடி கருதுகிறார், ஆனாலும் நான் அவர் மீது வெறுப்பு கொள்ளமாட்டேன் என்று கூறிவிட்டு, பிரதமர் இருக்கைக்குச் மோடியைக் கட்டித் தழுவினார். பதிலுக்கு ராகுலை அழைத்துக் கைகுலுக்கி பாராட்டினார் மோடி.

இந்தச் சம்பவம் பாஜக தலைவர்கள் மத்தியில் விமர்சனங்களாகவும், சமூக ஊடகங்களில் விவாதப்பொருளாகவும், காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப்பெரிய அரசியல் நகர்த்தலாகவும் பார்க்கப்படுகிறது.

இது குறித்து சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா கட்சி அங்கம் வகித்து இருந்தபோதிலும், கூட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்துவிட்டது.

அந்தக் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மும்பையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்றது பிரான்ஸ் அணியாக இருக்கலாம். அந்த அணிதான் இறுதியாக வென்றது. இதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மிகச்சிறிய நாடாக இருந்துகொண்டு, இறுதிப்போட்டி வரை வந்து, அனைவரின் மனதிலும் நிலைத்து நின்று இருப்பது குரோஷிய அணிதான்.

அதுபோலத்தான் நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம். இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆளும் பாஜகவுக்கு போதுமான எம்.பி.க்கள் இருக்கிறார்கள், வெற்றி பெறுவார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

அந்தக் கட்சிதான் வெற்றி பெறும் என்பது தெரிந்த விஷயம். ஆனால், அவையில் ராகுல் காந்தி பேசிய விதம்தான் இப்போது அனைவராலும் பேசப்படுகிறது. ராகுல் காந்தியின் பேச்சு, அவரை அரசியலில் 4 படிகள் முன்னேற்றி இருக்கிறது.

பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்த ராகுலின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், மோடிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கட்டிப்பிடித்தல் மூலம் ராகுல் கொடுத்திருந்ததால், அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்று அர்த்தம்.

மோடியின் பேச்சு எப்போதும் போலவே பிரதமர் பேச்சுபோலத்தான் இருந்தது. மோடி என்றும் மோடிதான். யாருடனும் மோடியை ஒப்பிட முடியாது. ஆனால், ராகுல் காந்தியின் பேச்சு, நேற்று பிரதமர் மோடியின் பேச்சுக்கு இணையாகப் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டது.

மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருக்கும் போது, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எளிதாகத் தோற்கடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அதிகாரம் அவர்களிடம் இருப்பதால், பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

பிரதமர் மோடியின் பேச்சை அடிக்கடி கேட்கும் இந்த தேசம், மாறாக, முதல் முறையாக ராகுல் காந்தியின் பேச்சைக் காதுகொடுத்து கேட்கத் தொடங்கி இருக்கிறது.”

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !