ரஷ்ய விமான விபத்து: தீவிர விசாரணை முன்னெடுப்பு

ரஷ்யாவுக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானமை தொடர்பாக, அந்நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த விமான விபத்துத் தொடர்பான விசாரணை மேற்கொள்வதற்காக, குழுவொன்றை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், ரஷ்ய விசாரணைக் குழுவினர் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

சீரற்ற காலநிலை, மனிதத் தவறு, தொழில்நுட்பக் கோளாறு ஆகியவற்றில் ஏதாவதொன்று விபத்துக்குக் காரணமாக அமையலாமெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சரடோவ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அன்டோனோவ் -148 எனும் விமானம், தலைநகர் மொஸ்கோவிலுள்ள டோமொடெடோவோ(Domodedovo) விமான நிலையத்திலிருந்து, ஆர்ஸ்க் நகர் நோக்கி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்டது. இந்நிலையில், விமானம் புறப்பட்டுச் சிறிதுநேரத்தில் மொஸ்கோவுக்கு அருகிலுள்ள ஆர்குனோவோ இடத்தில் விபத்துக்குள்ளானது.

விமானம் புறப்பட்டுச் சில நிமிடங்களில் விமானக் கட்டுப்பாட்டு அறையுடன்   விமானம்  தொடர்பின்றிக் காணப்பட்டதுடன், கண்காணிப்பு ரேடாரிலிருந்தும் விமானம் காணாமல் போயிருந்தது.

மேலும், இந்த விமானம் விபத்துக்குள்ளான வேளையில், விமானத்தில் 65 பயணிகளும் 6 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில், விமானத்தலிருந்த 71 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !