ரஷிய தூதர்களை வெளியேறுமாறு ஜெர்மனி அரசு உத்தரவு

ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.
தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான ‘மர்ம விஷம்’ ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதை தொடர்ந்து பிரிட்டனில் உள்ள ரஷியா நாட்டு தூதரக அதிகாரிகள் 23 பேரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக ரஷியாவில் இருந்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள் அனைவரையும் ரஷியா வெளியேற்றியது.
இந்நிலையில், ஜெர்மனி நாட்டில் உள்ள ரஷியா தூதர்கள் 4 பேரையும் வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சாலிஸ்பரி தாக்குதல் தொடர்பாக ரஷியா இதுவரை தெளிவான விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது. எனவே, ஜெர்மனியில் உள்ள 4 ரஷிய தூதர்களையும் வெளியேறுமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது என ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஹேய்க்கோ மாஸ் தெரிவித்துள்ளார்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !