ரஷிய அதிபர் தேர்தலில் புதினை எதிர்த்து போட்டியிட்ட முக்கிய வேட்பாளர் திடீர் நீக்கம்

ரஷிய அதிபராக விளாடிமிர் புதின் பதவி வகித்து வருகிறார். அவருடைய பதவி காலம் விரைவில் முடியவடைய இருப்பதால் வருகிற 18-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அன்று நடைபெறும் தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 சதவீத ஓட்டுகளை பெறவில்லை என்றால் 2-ம் மற்றும் இறுதிச்சுற்று தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 8-ந் தேதி நடத்தப்படும். இதில், முதல்கட்ட தேர்தலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுவார்கள்.

இதனால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் புதின் 64 சதவீத ஓட்டுகள் பெற்று முதல் சுற்று தேர்தலிலேயே அபார வெற்றி கண்டார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அவரால் ரஷியாவில் 2024-ம் ஆண்டு வரை ஆதிக்கம் செலுத்த முடியும்.

தற்போது அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் கடும் போட்டியை சந்திக்கவேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. அவருடைய அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்திய எதிர்க்கட்சி தலைவர் 41 வயது அலெக்சி நவல்னி புதினுக்கு சவாலாக திகழ்ந்து வந்தார்.

தற்போது அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ரஷியாவின் தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது. ஒரு கிரிமினல் வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதை காரணம் காட்டி அதிபர் தேர்தலில் அவருடைய வேட்பு மனுவை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகிவிட்டது. இது அரசியல் சூழ்ச்சி என்று அலெக்சி நவல்னி குற்றம்சாட்டி உள்ளார். முக்கிய எதிரி களத்தில் இல்லாத நிலையில் புதின் அதிபர் தேர்தலில் முன்னணி வேட்பாளராக உள்ளார்.

இவரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சியின் பிரபல கோடீசுவரர் பாவெல் குருடினின், பிரபல டி.வி. நடிகர் கெனியா சோப்சாக், விளாடிமிர் ஷிரிநோவ்ஸ்கி (பழமைவாத கட்சி), கிரிகோரி யவலின்ஸ்கி (லிபரல் கட்சி), கோடீசுவரர் போரிஸ் டிடோவ், செர்ஜி பபுரின் (தேசியவாத கட்சி), மாக்சிம் சுரைகின் (அதிருப்தி கம்யூனிஸ்டு) என 7 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

எனினும் 31 வயது கெனியா சோப்சாக், 3-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் லிபரல் கிரிகோரி யவலின்ஸ்கி (வயது 65) இருவரும் புதினுக்கு ஓரளவு சவாலை அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரிகோரி யவலின்ஸ்கி ஏற்கனவே 1996 மற்றும் 2000 ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு 10 சதவீதத்துக்கு சற்று நெருக்கமான வாக்குகளை பெற்றவர். கெனியா சோப்சாக், “நான் அனைவருக்கும் எதிராக போட்டியிடுகிறேன். இங்கே யாரும் பெரியவர் இல்லை” என்ற கோஷத்தை எழுப்பி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இவர்கள் இருவரையும் தவிர புதினை எதிர்த்து போட்டியிடும் மற்ற வேட்பாளர்களில் 6-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் 71 வயது விளாடிமிர் ஷிரிநோவ்ஸ்கி உள்ளிட்டோருக்கு 3 முதல் 5 சதவீத ஓட்டுகள் கிடைப்பதே அரிது என்று கூறப்படுகிறது.

இதனால் புதின் மீண்டும் ரஷிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !