ரணிலை சிங்களவர்கள் மன்னிக்கவே மாட்டார்கள் – கோட்டாபய ராஜபக்ஷ

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சிங்கள மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “போரின்போது எமது இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் சடலங்களின் படங்களையும், விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்களின் படங்களையும் வைத்துக்கொண்டு இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்று புலம்பெயர் புலிகள் அமைப்பினர் கருத்து வெளியிடுகின்றனர். இதை சில நாடுகளும், சில சர்வதேச அமைப்புகளும் நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஜெனீவாவில் இலங்கை மீது போர்க்குற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தற்போது இவற்றை நியாயப்படுத்தும் வகையில் பிரதமர் ரணிலும் கருத்து வெளியிட்டுள்ளார். தமிழ் மக்கள் மத்தியில் தனது அரசியல் இருப்பை தக்கவைக்கவே பிரதமர் பொய்யுரைக்கின்றார்.

இறுதிப் போரின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நான் இருந்தேன். எமது இராணுவத்தினர் எந்தச் சந்தர்ப்பங்களிலும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. அவர்கள் மிகவும் நேர்மையுடன் நடந்தார்கள்.

போரின் நிறைவில் சரணடைந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிப் போராளிகளை எமது இராணுவத்தினர் பக்குவமாக எம்மிடம் ஒப்படைத்தார்கள்.

அந்தப் போராளிகளுக்கு நாம் புனர்வாழ்வு வழங்கினோம். பின்னர் அவர்களை விடுதலை செய்து சமூகத்தில் இணைத்தோம். இந்நிலையில், எமது இராணுவத்தினரைக் காட்டிக் கொடுக்கும் வகையில் பிரதமர் ரணில் செயற்படுகின்றார்.

இதற்கான தண்டனையை தேர்தலின்போது அவர் எதிர்நோக்குவார். தெற்கு மக்கள் ஒருபோதும் அவரை மன்னிக்கமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !