ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கிய நிலையில், ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அனைவரும் தங்களது வாக்கினை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் வாக்களித்தனர். நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள பள்ளியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர் கமல்ஹாசன் தனது மகள் சுருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக கமல் வாக்குப்பதிவு செய்த பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்ததால், காத்திருந்து தனது ஓட்டை பதிவு செய்துவிட்டு சென்றார்.
மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.