ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு தகுதியற்றவர்கள்: டிராபிக் ராமசாமி

மக்கள் பாதுகாப்பு கழக தலைவர் டிராபிக் ராமசாமி கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 14-ந் தேதிக்குள் ஜனாதிபதி ஆட்சி வரும். சட்ட சபை சபாநாயகராக உள்ள தனபால், அப்பதவிக்கு தகுதி இல்லாதவர். அவர் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது. அவசர கோலத்தில் சபாநாயகர் செய்து விட்டார்.
ஆர்.கே. நகர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன், தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர். அவர் விரைவில் அ.தி.மு.க.வை கைப்பற்றுவார்.
தேர்தலில் கட்சிகளுக்கு சின்னம் கொடுக்கும் முறையை மாற்ற வேண்டும். அதற்கு பதில் நம்பர் முறையை கொண்டு வரலாம். சின்னத்தை மனதில் பதியவைத்து மக்கள் ஓட்டு போடுகிறார்கள். இதனால் நல்லவர்கள் அரசியலுக்கு வரமுடிவதில்லை.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய 2 பேரும் அரசியலுக்கு தகுதியற்றவர்கள். அவர்கள் விளம்பர பிரியர்கள். சட்டத்தை மதிக்காதவர்கள். நடிகர்களிடம் மக்கள் ரசிகர்களாக தான் இருப்பார்கள். ஓட்டு போட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !