யேமன் போர்நிறுத்தம்: அமுல் படுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே முறியடிப்பு

யேமனில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு ஒரு சில நிமிடங்களிலேயே அது ஹெளதி கிளர்ச்சியாளர்களால் மீறப்பட்டுள்ளதாக அரசாங்க சார்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துறைமுக நகரான ஹொடைடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் போர்நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு யேமனில் போரிடும் கட்சிகளுக்கிடையே ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால், நிவாரணப் பொருட்கள் பரிமாற்றத்திற்கான முக்கிய நுழைவாயிலாக விளங்கும் துறைமுக நகரில் ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும், அரச சார்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு ஹொடைடா பகுதியில் ஹெளதி கிளர்ச்சியாளர்கள், அரச படையினர் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறாக இருதரப்பிற்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து வருவதாக அரச சார்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. அனுசரணையுடன் சுவீடனில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஈரான் ஒத்துழைப்பு ஹெளதி குழுவிற்கும், சவுதி ஆதரவு அரசாங்கமான அப்த் ரப்பு மன்சூர் ஹாதிக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஹாதி அரசாங்கத்தில் சவுதி தலையிட ஆரம்பித்தத்தை தொடர்ந்து யேமன் தலைநகர் சனா மற்றும் ஹொடைடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களை ஹெளதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இந்நிலையில், இந்த போர்நிறுத்தமானது நாட்டில் சமாதானத்தையும், ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் ஹொடைடா மக்கள் காத்திருந்த நிலையில் அங்கு மோதல்கள் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !