யேமன் தாக்குதல்: தந்தையின் சடலத்தைவிட்டு அகல மறுக்கும் சிறுவன்

வடக்கு யேமனில் திருமண நிகழ்வு இடம்பெற்ற கட்டடத்தில் சவுதி தலைமையிலான கூட்டணி நடத்திய விமானத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது, வெளியாகியுள்ளன.

20 பேரின் உயிரை காவுகொண்ட தாக்குதல் குறித்த காணொளிகளை வடக்கு யேமனின் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹெளதி போராளிகள் குழு நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், விமான தாக்குதலில் சிதைந்துள்ள கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் தந்தையின் சடலத்தை கட்டி அணைத்தபடி கதறும் சிறுவனின் கதறல் நெஞ்சை பதறவைக்கிறது.

இருண்ட கட்டடத்தின் தரையில் தந்தையின் சடலத்தை கட்டியணைத்தவாறு சிறுவன் ஒருவன் வெளியேற மறுத்து கூச்சலிடுவது காணொளிகளில் பதிவாகியுள்ளது.

அதுமட்டுமன்றி உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஒன்றாக சேர்த்து வைக்கப்பட்டுள்ளதும் ஆங்காங்கே குருதி தோய்ந்த தரையும் கட்டட இடிபாடுகளும் கூட காணொளியில் பதிவாகியுள்ளது.

இவ்வாறிருக்கையில், ரொய்ட்டர்ஸ் ஊடகத்துக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கிய ஹஜ்ஜா பகுதியுள்ள மருத்துவமனையின் தலைவர், தமது மருத்துவமனைக்கு 40 சடலங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் அவற்றில் பெரும்பாலானவை துண்டு துண்டாக சிதைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் மேலும் 30 சிறுவர்கள் உட்பட 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் உள்ளூர் குடியிருப்பாளர்களும், மருத்துவ உதவியாளர்களும் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறிருக்கையில் இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யப்படும் என சவுதி தலைமையிலான கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுமக்கள் இலக்கு வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வடக்கு யேமனில் பெரும் பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஹெளதி போராளிகளுக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சவுதி தலைமையிலான கூட்டணி போரில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த போரில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !