Main Menu

யேமனில் பள்ளிவாசல் மீது தாக்குதல் – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு

யேமனில் இராணுவ முகாமில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது.

யேமன் நாட்டில் ஜனாதிபதி அப்துரப்பா மன்சூர் ஹாதி படையினருக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி படையினருக்கும் இடையே 2015ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 19ஆம் திகதி தொடங்கிய உள்நாட்டுப்போர் இன்னும் நீடித்து வருகிறது.

இந்நிலையில், யேமன் நகரமான மரிபில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 60 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் ஆரம்பத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் எக்பரியா தொலைக்காட்சி ஆதாராத்துடன் செய்தி வெளியிட்டது.

ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் யேமனில் ஒரு பினாமி போர் நடந்து வருகிற நிலையில் ஹவுத்திகள் ஈரானின் கைக்கூலிகள் என தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் சனா மற்றும் யேமனின் பெரும்பாலான நகர மையங்களை வைத்திருக்கும் ஹவுத்திகள் ஈரானின் சார்பாக இயங்குகின்றது என்ற குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது.

இதனால் இந்த தாக்குதலுக்கு ஹவுத்திஸ் போராளிகள் உடனடியாக பொறுப்பேற்க மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த ஏவுகணை தாக்குதலுக்கு யேமன் ஜனாதிபதி அப்துரப்பா மன்சூர் ஹாதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“பயங்கரவாதிகள் நடத்தியுள்ள இந்த தாக்குதல் கோழைத்தனமான தாக்குதல் ஆகும். ஹவுத்தி பயங்கரவாதிகள் நடத்தியுள்ள இந்த தாக்குதல் அவர்கள் அமைதியை, சமாதானத்தை ஒருபோதும் விரும்புவதில்லை என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி சொல்கிறது. இதில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கள், அழிவு, இந்த பிராந்தியத்தில் ஈரான் செய்துள்ள கைவேலை ஆகும்” என குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் இதுவரையில் எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.