யேமனில் சிறுவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை – குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

யேமனில் உள்ள துறைமுக நகரமான ஏடென் பகுதியில் வசித்துவந்த முஹம்மட் சாத் என்ற 12 வயது சிறுவனை கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடத்திச் சென்ற சிலர் அவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருந்தனர்.

வலியால் கதறிய சிறுவனின் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அவனது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்ற குற்றச்சாட்டில் இருவரை கைது செய்த பொலிஸார், வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

சிறுவனின் சடலத்தை மறைப்பதற்கு உதவியதாக ஒரு பெண்ணும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் அவர்கள் மூவருக்கும் அண்மையில் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களை பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் தற்போது கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கான மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மீதமுள்ள இரு குற்றவாளிகளான வதா ரெஃபாத்(28) மற்றும் முஹம்மட் காலெத்(31) ஆகியோருக்கு கடந்த 7 ஆம் திகதி திறந்தவெளியில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

முறைப்படி, மருத்துவர்களின் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் குற்றவாளிகள் இருவரும் தரையில் படுக்க வைக்கப்பட்டு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்படும் காட்சியை அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் நேரில் கண்டனர்.  சிலர் இந்த கோரக்காட்சியை கைத்தொலைபேசிகளில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றமும் செய்தனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !