யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்

யெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ வெஸ்ட் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் 14ஆவது வாரமாக நேற்றும் (சனிக்கிழமை) தொடர்ந்தது.

இதன்போது யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி Alain Finkielkraut ஆர்ப்பாட்டக்காரர்களால் பலவந்தமாக தலைநகர் பரிஸில் தடுத்துவைக்கப்பட்டார். அதன் பின்னர் பொலிஸார் சென்று அவரை விடுவித்தனர்.

இந்நிலையில், பிரான்ஸின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான இச்செயற்பாட்டை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாதென ஜனாதிபதி மக்ரோன் கூறியுள்ளார்.

தத்துவஞானியை தடுத்துவைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை கடுமையாக வசைபாடியுள்ளனர். பொலிஸார் அவ்விடத்திற்கு வராவிட்டால் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கும் என்றும் Alain Finkielkraut கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது யெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதலுக்கு உள்ளானபோது அதுகுறித்து அனுதாபம் தெரிவித்திருந்த Alain Finkielkraut,  பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டனம் வெளியிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதி மக்ரோன் தன்னுடன் நேற்று தொலைபேசியில் உரையாடியதாகவும் Alain Finkielkraut குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த தொடர் போராட்டத்தின்போது, வன்முறைகளும் இடம்பெறுகின்றன. நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது வன்முறைகளில் ஈடுபட்ட 16 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !