யுத்த குற்றம் புரிந்த அமெரிக்க இராணுவ உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு!
யுத்த குற்றம் புரிந்த அமெரிக்க இராணுவ உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வந்துள்ளார்.
இவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவது குறித்த ஆவணங்களை தயார் செய்யும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ‘நியூ யோர்க் ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களில் ஈராக் தாக்குதல் ஒன்றின் போது, நிராயுதபாணியான பொது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தமை கைது செய்யப்பட்ட பொதுமகன் ஒருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொன்ற இராணுவ தரப்பும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த அமெரிக்க இராணுவத்தினரின் ஞாபகார்த்த தினமான எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான ஆவணங்களை தமது கையொப்பத்திற்காக அனுப்புமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்படியான மன்னிப்பு வழங்குவதற்கான ஆவணங்கள் தயாரிப்பதற்கு அமெரிக்க நீதி ராஜாங்க அமைச்சுக்கு பல மாதங்களை செலவிடும்.
எனினும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதி பாரிய அழுத்தத்தை கொடுப்பதனால், நீதி ராஜாங்க அமைச்சு இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.