யுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது: யஸ்மின் சூக்கா

யுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் ஐ.நாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

சர்வதேச அமைதிப் படையில் அங்கம் வகிப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரி விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது,

“யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்றோ ஒருநாள் தீர்வு கிடைக்குமென்ற எண்ணம், இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியை திருப்பி அனுப்புவதற்கு ஐக்கிய நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தின் ஊடாக ஏற்பட்டுள்ளது.

மேலும் யுத்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எவரும் ஐ.நா.வில் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது என்பதை இச்செயற்பாடு நிரூபித்துள்ளது.

அந்தவகையில் யுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்காலத்திலும் ஐ.நா.வின் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது.

இதேவேளை, அமைதிப்படை தொடர்பான திணைக்களத்திற்கு இலங்கையின் இராணுவ அதிகாரி அமுனுபுர தொடர்பாக நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்களே, ஐ.நா அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என்பதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்” என அவ்வறிக்கையில் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !