யுத்தக் குற்றம்: இராணுவ தளபதியை நாட்டிற்கு திருப்பியழைக்க ஐ.நா. வலியுறுத்து!

ஐ.நா. அமைதிப்படையில் பங்கேற்றுள்ள இலங்கை இராணுவத்தின் 200 பேர் கொண்ட குழுவின் தளபதியை நாட்டிற்கு திருப்பியழைக்குமாறு ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

மனித உரிமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஐ.நா. பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார். லெப்டினன்ட் கேர்ணல் கலன அமுனுபுர என்ற இராணுவ படைத்தளபதி மீதே இக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் கண்டறியப்பட்டதன் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ், இலங்கை அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக ஐ.நா. பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாலியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை படையின் தளபதி யுத்தக்குற்றசாட்டிற்கு உள்ளாகியவர் என சர்வதேசத்தால் விமர்சிக்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களில் அவருக்கும் பங்குண்டென சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் குற்றஞ்சாட்டியிருந்தது.

எனினும், குறித்த தளபதியின் பெயர் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவர் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐ.நா.வின் இத்தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எவ்வித பதிலையும் வழங்கவில்லை.

இலங்கை படையினர மீது பாரிய மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், ஐ.நா. பாதுகாப்புப் படையில் அவர்களை அனுமதிப்பததை தடைசெய்ய வேண்டுமென சர்வதேச மனித உரிமைசார் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன

குறிப்பாக விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 50 பேரின் விபரங்களை கடந்த ஏப்ரல் மாதம் ஐ.நா.விற்கு அனுப்பியதாகவும், அவர்கள் அமைதிப்படையில் பங்கேற்பதை தடைசெய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !