யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வரும் மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர் கைது
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வரும் மக்களை ஏமாற்றி அவர்களுக்கு உரிய ஆவணங்களை துரிதமாக பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை மாவட்ட செயலக அதிகாரிகள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மாவட்ட செயலகத்திற்கு வரும் பொது மக்களிடம் உங்களுக்கு தேவையான ஆவணங்களை துரிதமாக பெற்று தருவதாக கூறி நபர் ஒருவர் பணத்தினை பெற்று வருவதாக மாவட்ட செயலக அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.
அது தொடர்பில் மாவட்ட செயலக வாளகத்தில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.ரி.வி. கமராக்களின் உதவியுடன் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்த போது மோசடியில் ஈடுபடும் நபரை இனம் கண்டு கொண்டனர்.
குறித்த நபர் நேற்று புதன்கிழமை மாலை மாவட்ட செயலக வளாகத்தில் நபர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்ததை அவதானித்த அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்ட நபரை மடக்கி பிடித்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் யாழ்ப்பாண காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.