Main Menu

யாழ். பல்கலையில் மீண்டும் ராக்கிங் கொடூரம் – மாணவன் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி

பகிடிவதை காரணமாக யாழ். பல்கலைக் கழகத்தின் புதுமுக கலைப்பீட மாணவன் ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழக்க முயற்சித்தநிலையில், அதிகாரிகளின் தலையீட்டால் மாணவன் காப்பாற்றப்பட்டார்.

இதையடுத்து பகிடிவதையில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மாணவனிடம் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரி ஒருவர், மாணவனால் மிரட்டப்பட்ட நிலையில் பதவி விலகல் கடிதத்தை யாழ். பல்கலையின் தகுதி வாய்ந்த அதிகாரியிடம் கையளித்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருபவை வருமாறு-

யாழ். பல்கலைக் கழகத்தின் கலைப்பீட புதுமாணவனை, மூத்த மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த புதுமுக மாணவன் தாம் உயிரிழக்கப் போகிறார் என சக மாணவர்களிடம் நேற்றுமுன்தினம் கூறியுள்ளார். இதையடுத்து குறித்த விடயத்தை சக மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

இந்நிலையில், பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் விசாரணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டார். விசாரணையின்போது, குறித்த மாணவன் புறொக்டரை (பிரதான முறைப்பாட்டு அதிகாரி) மிரட்டும் வகையில் நடந்துள்ளார்.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மாணவனின் மிரட்டலையடுத்து, தாம் பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார் என புறொக்டர், தகுதி வாய்ந்த அதிகாரிக்கு நேற்றுமுன்தினம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து நேற்று மாலை மிரட்டிய மாணவனை அழைத்து, புறொக்டரிடம் மன்னிப்புக் கோருமாறு தகுதி வாய்ந்த அதிகாரி கோரினார்.

பின்னர், மாணவன் மன்னிப்புக் கோரியதையடுத்து, புறொக்டர் தனது பதவி விலகல் கடிதத்தை மீளப் பெற்றுள்ளார்.
மாணவனுக்கு எந்தவொரு தண்டனையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது