யாழில் 147 படை முகாம்கள்: அரசியல்வாதிகள் மௌனம்?

யாழ். குடாநாட்டில், இலங்கை முப்படையினருக்கும் சொந்தமான 147 முகாம்கள் தற்போது இயங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தீவகப் பகுதிகளிலேயே அதிகளவிலான படைமுகாம்கள் முகாம்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் நெருங்கவுள்ள நிலையில், வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் தொடர்ந்தும் காணப்படுவதாக, பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

மஹிந்த அரசாங்கத்தின் காலத்திலும், தற்போதைய மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் காலத்திலும் இராணுவக் குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றே வடக்கு- கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளால் தொடர்ச்சியாக கோரி வருகின்றனர்.

இதற்கிணங்க, அரசாங்கங்களினால் சில செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது வெறும் கண்துடைப்பிற்காக மேற்கொள்ளப்படும் ஒன்றே தவிர, தமது முழுமையான சுதந்திரத்தையும் உரிமையையும் நிலைநாட்ட அரசாங்கங்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றே வடக்கு- கிழக்கு மக்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், 93 கடற்படை முகாம்கள், 54 இராணுவ முகாம்கள் மற்றும் ஒரு விமானப்படை முகாம் என்பன தற்போது இயங்கிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவை தீவகப் பகுதிகளிலேயே அதிகளவாகக் காணப்படுகின்றன என்றும், இந்தப் பகுதிகளில் மட்டும் 61 முகாம்கள் அமைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குடாநாட்டின் ஏனைய கரையோரப் பகுதிகளில், இலங்கை கடற்படையினரின் 32 முகாம்கள் காணப்படுவதாகவும் இதற்காக 269 ஏக்கர் தனியார் காணிகளும், 260 ஏக்கர் அரச காணிகளும் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, யாழ். குடாநாட்டில் 18 பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் பொலிஸார் தங்கியுள்ள காரணத்தினால், தனியார் காணிகள் சில அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், 200 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர முடியாத நிலையில் காணப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !