யாழில் வன்முறைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – ஆளுநர் தலைமையில் விசேட கூட்டம்

யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைவஸ்து பாவனையினைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இக்கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், பொலிஸ் மற்றும் இராணுவ உயரதிகாரிகள், மதத் தலைவர்கள், சமூக அக்கறையுடைய புத்திஜீவிகள், யாழ்ப்பாண அனைத்து பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மூன்று மணி நேரம் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அரச உயர் அதிகாரிகளினாலும், சமூகப் பிரதிநிதிகளினாலும், மதத் தலைவர்களினாலும் பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து ஆளுநர் தெரிவிக்கையில், ”வன்முறை மற்றும் சமூக சீரழிவுகளை தடுப்பதற்காக சமூக பிரதிநிதிகளையும், மதத் தலைவர்களையும், அதிகாரிகளையும், சட்டத்துறையை சேர்ந்தவர்களையும் மற்றும் பாதுகாப்புத் தரப்பினையும் ஒன்றிணைத்து கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியுள்ளது. அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

இன்றைய காலகட்டத்தில் இந்து அறநெறிப்பாடசாலைகளைத் தோற்றுவித்து அறநெறிகளை குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். அதன் மூலம் வன்முறை உள்ளிட்ட தவறான பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்ளலாம்.

பௌத்த, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்கள் தத்தமது சமய நெறிகளை அறநெறிபாடசாலைகள் ஊடாக சிறுவர்களுக்கு போதித்து வரும் நிலையில் இந்து சமயம் அறநெறிகளை தமது சமயம் சார்ந்தவர்களுக்கு போதிப்பதில் வீழ்ச்சி கண்டுள்ளதை உணரமுடிகின்றது” என்று அவர் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !