Main Menu

யார் அமெரிக்கவாதி ? யார் சீன வாதி ? என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் : விஜயதாச ராஜபக்ச

அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுடன் சர்வதேச உடன்படிக்கைகளை செய்துகொண்டு நாட்டினை நாசமாக்கிவருகின்ற நிலையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பிரதான இரண்டு வேட்பாளர்களின் யார் அமெரிக்கவாதி யார் சீனவாதி என்பதை மக்கள் தெரிந்து தீர்மானம் எடுக்க வேண்டும்.

இந்தியா போன்ற நாடுகளை பகைத்துக்கொண்டு முப்பது ஆண்டுகள் நாம் பட்டபாட்டை மீண்டும் உருவாக்கிவிட வேண்டுமா என எதிர்க்கட்சி பக்கம் அங்கம் வகிக்கும் சுயாதீன உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.  

இலங்கை  அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகளுடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தங்களை சபைக்கு சமர்ப்பிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

நாட்டை போலவே பாராளுமன்றமும் ஊழல் நிறைந்தது என்று நான் கூறிய விடயம் பொறுப்புடன் கூறியதாகும். நான் கூறிய அந்தக் கருத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்ல. இதில் நான் சபாநாயகரை இலக்கு வைத்து  கூறவில்லை.

 அவர் இது குறித்து மனம் நொந்ததாக அறிந்துகொண்டேன். நான் அவரை இலக்கு வைத்து கூறியதாக கருத வேண்டாம். அவரும் இந்த பாராளுமன்றத்தை ஜனநாயக சபையாக முன்னெடுத்து செல்ல பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார் என்பது எனக்குத் தெரியும். நாம் எந்த கட்சியின் உறுப்பினராக வந்தாலும் மக்கள் எதிர்பார்க்கும் காரணிகள் ஒன்றுதான். 

மக்களுக்காக செவியேற்ற வேண்டும் என்பதே சகல மக்களின் நிலைப்பாடு. இதில் பாராளுமன்றத்திற்கு வரும் உறுப்பினர்கள் மனித நேயத்துடன் மனசாட்சிக்கு அமைய செயற்படுகின்றார்களா என்பதை அவரவர் தெரிந்துகொள்ள வேண்டும். கட்சிக்கு கட்டுப்பட்டு மனசாட்சியை கொலைசெய்ய நான் தயார் இல்லை. 

மேலும் ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் இருப்பதாகவும் எமது நாட்டினை தாக்கும் திட்டம் உள்ளது என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னிருந்தே கூறி வந்தேன். அப்போது என்னை விமர்சித்த நபர்கள் இன்று என்ன செய்யப்போகின்றனர். 

இன்று அனைவருக்கும் உண்மை என்னவென்பது தெரிந்தும் ஒன்றும் செய்வதற்கு இல்லை. இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எப்போது நியமித்திருக்க வேண்டும். காலம் கடந்து முடிவெடுத்து என்ன பயன். 2017 ஆம் ஆண்டு நாம் கொண்டுவந்த உள்ளூராட்சி சபை  திருத்த சட்டத்தை அவரவர் தேவைக்கு ஏற்ப மாற்றி இன்று நாட்டில் உள்ளூராட்சி சபைகளின் நிலைமைகளை பாருங்கள். 

எவருக்கும் இயங்க முடியாத மோசமான நிலைமை உள்ளது. கோடிக் கணக்கில் பணத்தை செலவழித்தும் மக்களுக்கு சேவையாற்ற முடியாத நிலைமை உள்ளது. எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட்ட போது சட்டதிட்டங்களை பலவீனப்படுத்தி இன்று மாகாணசபை தேர்தலை நடத்த முடியாத நிலைமையே உள்ளது. இவற்றின் மூலமாக இறுதியாக மக்களுக்கே பாதிப்பாக உள்ளது. இதுவா மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள். இதனை எடுத்துக்கூடிவது தவறா? 

இன்று மக்களுக்கு தேர்தல் ஒன்றினை கோரி நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. 19 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் குறைபாடுகள் இருக்கலாம் ஆனால் அதனை விட ஆணைக்குழுக்களின் தவறான நடத்தைகளும் அதிகார தலையீடுகளும் இவற்றை எல்லாம் தடுக்கின்றது. 

13 ஆம் திருத்தத்தை கொண்டு பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இது கொண்டுவரப்பட்ட ஆணைக்குழு மக்களுக்கு பாதுகாப்பை கொடுத்ததா? இந்திய புலனாய்வு கூறியும், இங்கு அதிகாரிகளும் கூறியும் பொலிஸ் ஆணைக்குழு செயட்பட்டதா? மரண ஆணைக்குழுவாக  பொலிஸ் ஆணைக்குழு மாறிவிட்டது. தேர்தல்கள் ஆணைக்குழு மாற்றப்பட்டு ஜனநாயக ரீதியில் நியமிக்கப்பட்டது. 

ஆனால் நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து நாட்டில் தேர்தல் இல்லை. இவ்வாறான செயற்பாடுகள் பலவீனம் இல்லையா? இவை குறித்து நாம் பேசக் கூடாதா? எந்த ஆட்சியில் எந்த தரப்பில் இருந்தாலும் அரசாங்கம் செய்யும் தவறுகளை விமர்சிக்க வேண்டும். சுட்டிக்காட்ட வேண்டும். அதனை தடுக்க முடியாது. 

இந்த நாட்டில் ஊழல் மோசடிகள் அதிகரித்து வருகின்றது. எங்கே ஊழல் தடுப்பு  ஆணைக்குழு? நானே பல முறைப்பாடுகளை செய்துள்ளேன். எங்கே இது குறித்த விசாரணைகள். இவற்றுக்கு மத்தியில் மக்களுக்கு எவ்வாறு அரசியல் நம்பிக்கை ஏற்படும். இந்த நட்டு மக்களுக்கு நிலங்கள் வழங்க வேண்டும். 

அதில் எவரும் எதிர்ப்பு இல்லை. ஆனால் நிலங்களை வழங்கும் போது அரசாங்கம்  பல விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். காடுகளை பாதுகாக்க வேண்டும். மக்களை காடுகளுக்கு அனுப்பக்கூடாது. மக்களை பாதுகாக்க வேண்டும். ஆனால் இன்று என்ன நடக்கின்றது. அதுமட்டும் அல்ல சர்வதேச உடன்படிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். 

ஹம்பாந்தோட்டை உடன்படிக்கையை செய்தபோது நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். இது குறித்து விவாதம் கேட்டு விவாதம் நடத்த இரண்டு நாட்கள் இருக்கையில் சபையில் அனைவரதும் மேசைகளில் சீனா வழங்கிய கணினி பொருத்தப்பட்டது. இதை நான்  உதவியாக பார்க்கவில்லை இலஞ்சமாகவே  கருதினேன். அதனையே நான்  அன்று அவ்வாறு கூறினேன். 

கையூட்டல்களை கொடுத்து நாட்டினை கூறுபோட இடமளிக்க முடியாது. ஆயுதங்களுக்கு இல்லாத பலம் இன்று டொலருக்கு உள்ளது. இவ்வாறான நிலையில் சிறிய நாடான நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இந்தியா போன்ற நாடுகளை பகைத்துகொள்ள கூடாது. ஆரம்பத்தில் இந்தியாவை பகைத்துக்கொண்டதன் மூலம் பிரபாகரன் போன்றவர்களை உருவாக்கி இந்தியாவில் பயிற்ச்சிகளை  வழங்கி   இறுதியில் முப்பது ஆண்டுகள் நாம் பட்ட பாடு நன்றாக அனைவருக்கும் தெரியும். 

அதே தவறுகளை மீண்டும் செய்ய வேண்டுமா என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். நாம் நினைக்காத  நேரங்களில் குண்டுகள் வெடிக்கப்பட்டு  இறுதியில் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆகவே துறைமுகங்களை கைப்பற்றி அதன் மூலமா நாட்டினை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது.  இன்னும் சிறிது காலத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ளது. 

இதில் யாரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஆனால் எவ்வாறான நாட்டினை உருவாக்க வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் தீர்மானிக்க வேண்டும். இதில் பிரதான வேட்பாளர்களில் யார் அமெரிக்கவாதி யார் சீனவாதி,  இவர்கள் இருவரின் யார் நாட்டுக்கு நல்லவர்கள் இவர்களால் நாட்டுக்கு என்ன நன்மைகள் ஏற்படப்போகின்றது என்பதை கருத்தில் கொண்டு மக்கள்  தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார். 

பகிரவும்...