மோசடிகளை மறைக்க மஹிந்த அணி சூழ்ச்சி! – அஜித் மான்னப்பெரும

கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகளை மறைப்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கடந்த ஆட்சியாளர்கள் குற்றஞ்சுமத்தி வருகின்றனர் என சுற்றாடல் பிரதியமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட அஜித் மான்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜூன் அலோஸியஸிடம் பணம் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டும் அவ்வாறானதே என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதியமைச்சராக பதவியேற்றுக்கொண்ட பின்னர் அங்கிருந்து வெளியேறிய அஜித் மான்னப்பெருமவிடம், ”பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியிடம் 118 அரசியல்வாதிகள் பணம்பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நீங்களும் பணம் பெற்றுக்கொண்டீர்களா?” என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த போதே மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றதாக சிலர் கூறுவதை வைத்துக்கொண்டே எல்லோரும் கதைக்கின்றனர். அவ்வாறு பணம்பெற்றுக்கொண்டமை தொடர்பாக எவ்வித உத்தியோகபூர்வமான தகவல்களும் இல்லையென சபாநாயகரே அறிவித்துள்ளார்.

உண்மையில் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகளை மறைப்பதற்கு, மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியில் ஆரம்பிக்கப்பட்ட திருட்டு, ஹைஜீன் எண்ணெய் உடன்படிக்கை, மிக் விமான கொடுக்கல் வாங்கல் என பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை மறைப்பதற்காக, இந்த அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறிய நாள் தொடக்கம் அரசாங்கத்தின் மீது சேறு பூசுகின்றனர். மக்கள் இந்த சூழ்ச்சியில் சிக்கிவிடக் கூடாது.

ஒருவர் பணம் பெற்றார் என்பதற்காக அனைவரையும் குறைகூற முடியாது. நான் மட்டுமல்ல, இன்னும் பலர் பணம் பெற்றுக்கொண்டனர் என ஒருவர் கூறுவதை ஆதாரமாகக் கொண்டு ஏனையோரை குறைகூற முடியாது” என்றார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !