மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து இணை இயக்குநர் பில்கேட்ஸ் விலகல்!
உலகின் மிகப்பெரிய மென்பொருள், தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து இணை இயக்குநர் பில்கேட்ஸ் விலகியுள்ளார்.
இதனை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதௌ;ளா அறிக்கையொன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், அந்த அறிக்கையில் பில்கேட்ஸ் சத்யா நாதௌ;ளாவுக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் பங்களிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று பில்கேட்ஸின் நெருங்கிய நண்பர் நடத்தி வந்த பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்திலிருந்தும் விலகுவதாகவும் பில்கேட்ஸ் அறிவித்துள்ளார்.
தன் விலகலுக்கு விளக்கம் அளித்துள்ள பில் கேட்ஸ், ‘நான் பணியாற்றும் மைக்ரோசாஃப்ட் மற்றும் பெர்க்ஷயர் ஹாத்வே ஆகிய இரண்டு பொது நிறுவனங்களிலிருந்தும் விலகுவதாக முடிவெடுத்துள்ளேன். உலகளாவிய சுகாதாரம், மேம்பாடு, கல்வி மற்றும் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் எனது ஈடுபாடு அதிகரித்து வருவதால் இவற்றுக்கு முன்னுரிமை வழங்கி அதிக நேரம் செலவழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என்று தன் லிங்கடின் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அத்தியாவசிய தொழில்நுட்ப பொருளாக உள்ள கணினியை உலகம் முழுவதும் பிரபலமாக்கியதில் பில்கேட்ஸுக்கு மிகப் பெரிய பங்குண்டு. கடந்த 1975ஆம் ஆண்டு தன் பள்ளிக் கால நண்பர் பால் ஆலனுடன் சேர்ந்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தைத் பில்கேட்ஸ் தொடங்கினார்.
முன்னதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக பதவியிலிருந்து விலகி இயக்குநர் குழுவில் வேலை செய்து வந்தார். தற்போது மொத்தமாக அந்த நிறுவனத்தின் சபை குழுவிலிருந்து விலகி ஆலோசகராக மட்டுமே பணியாற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பில்கேட்ஸ் ‘பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி பல நாடுகளில் மருத்துவம் மற்றும் குழந்தைகள் நலனுக்கான ஊட்டச்சத்துகளை அளிப்பதிலும், வாழ்வியலை அழகானதாக மாற்றும் தூய்மை ஆகிய சேவைகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.