Main Menu

மே 23-ந்தேதிக்கு பின் மத்தியிலும் மாநிலத்திலும் புதிய ஆட்சி அமைப்போம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் எதிர்பார்ப்பது, மத்தியில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சி சாய்வதை! தமிழ் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் மக்கள் விரோத ஆட்சிகளின் மாற்றத்தை! பெரும்பான்மையை இழந்து அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் மைனாரிட்டி அ.தி.மு.க. ஆட்சி ஏற்கனவே வாக்குப் பதிவு நடந்துள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் தன் படுதோல்வி பயத்தை உணர்ந்திருக்கிறது.

கூடுதலாக, மே 19-ம் நாள் நடைபெறவிருக்கும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனது ஆட்சிக்கான முடிவுரை உறுதியாக எழுதப்படும் என்பதையும் உணர்ந்தே உதறலில் இருக்கிறது.

ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் ‘சவுகிதார்’ (பாதுகாவலர்) ஆகிவிடக்கூடாது என்பதை தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அது குறித்த சட்டரீதியான அணுகுமுறைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் சூழ்ச்சியான வகையில் என்னதான் தந்திரங்கள் செய்தாலும், மக்கள் மன்றத்தில் அது ஒருபோதும் எடுபடவில்லை, ஏமாற்றமே மிஞ்சும் என்பதை ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வரும் தேர்தல் வாக்குப்பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு சற்றும் சளைக்காத அடிமை அ.தி.மு.க. ஆட்சியும் ஏற்கனவே தனது மெஜாரிட்டியை இழந்து விட்ட நிலையில், மத்தியில் பா.ஜ.க. அரசை மக்கள் வீழ்த்தும்போது மாநிலத்தில் தனது ஆட்சியும் சேர்ந்தே தானாகவே வீழும் என்பதை அறிந்திருக்கிறது.

அத்துடன், 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் புதிய ஆக்கபூர்வமான ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் என்பதால்தான், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடங்கி, பேரவைத் தலைவரின் அக்கிரம நோட்டீஸ் வரை ஜனநாயக விரோத செயல்பாடுகளின் அராஜகமான உச்சகட்டத்திற்குத் திட்டமிடுகிறது. அதனை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தி.மு.க.வும் அதன் தலைமையிலான கூட்டணிக்கும் இருக்கிறது. நம்மைவிட அதிகமான ஆர்வத்துடன் வாக்காளப் பெருமக்கள் இருக்கிறார்கள்.

கோடைக்காலத்தில் கொளுத்துகின்றது அக்கினி வெயில். வறண்டு கிடக்கின்றன ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள். மக்களின் தண்ணீர் தாகத்தைக்கூட தீர்க்கும் யோக்கியதை இன்றி ஒரு ஆட்சி பெயருக்கு நடந்து கொண்டிருக்கிறது. காலிக் குடங்களும், கண்ணீருமாக நெடுந்தூரம் கவலையையும் சுமந்து நடக்கிறார்கள் தாய்மார்கள்.

அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகள் உயிரில்லாமல் செயலிழந்து கிடக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமலேயே ஒட்டு மொத்தமாக டெண்டர் கொள்ளை அடிப்பது ஒன்றிலேயே குறியாக இருக்கிறது கமி‌ஷன்- கரப்‌ஷன் கலெக்சனைக் கொள்கையாகக் கொண்ட கொள்ளைக்கூட்ட அரசு. ஒரு குடம் குடிநீர் தர வக்கற்ற ஆட்சி நீடிப்பதை வாக்காளர்கள் எப்படி விரும்புவார்கள்? விலை கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்கிற நயவஞ்சக ஆட்சியாளர்களை நம்புவதற்கு தமிழக மக்கள் இனியும் தயாராக இல்லை.

மக்களின் பேராதரவால் ஏற்கனவே தமிழகம்- புதுவை மக்களவைத் தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டிருக்கும் நமது வெற்றியை, முழுமையானதாக்க 100 சதவீத வெற்றியாக மாற்றிட 4 தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் இடைவிடாமல் முழுவீச்சுடன் பணியாற்றிட வேண்டுகிறேன்.

இது 4 தொகுதிகளைச் சார்ந்த கழக நிர்வாகிகள் தேர்தல் பொறுப்பாளர்கள் உடன்பிறப்புகளுக்கு மட்டுமான வேண்டுகோள் அல்ல. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மற்ற தொகுதிகளில் உள்ள உடன்பிறப்புகளும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி 4 தொகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்புப் பரப்புரையை மேற்கொள்ள முடியும். ஜனநாயக முறையில் உதய சூரியனுக்கு வாக்கு சேகரிப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட வேண்டாம்.

நம்மை வெற்றி பெறச் செய்ய மக்கள் விரும்பி ஆயத்தமாக இருக்கிறார்கள். மக்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதில் நாம் முனைப்பாகச் செயலாற்ற வேண்டும்.

ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யப் போகும் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கான முத்திரையைப் பதிப்போம். மே 23-ந்தேதிக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் போற்றும் மகத்தான நல்லரசு அமைப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பகிரவும்...