Main Menu

மே 11க்கு பின்னரும் சுவாசக்கவசம் அனைவரும் அணியவேண்டிய கட்டாயம் உள்ளது – மக்ரோன்

எதிர்வரும் மே, 11ம் நாள் திங்கட்கிழமை வரை பொதுமுடக்கம் நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ள அதிபர் ஏமானுவல் மக்ரோன், அதற்கு பின்னராகவும் பல மாதங்களுக்கு கொரோனா வைரசினை எதிர்கொண்டு வாழவேண்டிய நிர்பந்த நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

பொதுமுடக்கத்தின் 28 நாளில் பிரென்சு தேசமே எதிர்பார்த்திருந்த முக்கியமானதொரு உரையினை 27 நிமிடங்களுக்கு வழங்கிய அதிபர் அவர்கள், பிரான்சின் திசைவழிப்பாதையினை நாட்டுமக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.

குறிப்பாக மே 11க்கு பின்னராக சுவாசக்கவசம் அனைவரும் அணியவேண்டிய கட்டாயம் உள்ளது என தெரிவித்துள்ள அதிபர், எதிர்வரும் 15 நாட்களுக்குள் கொரோனாவை எதிர்கொண்டு வாழ்வதற்குரிய நடைமுறை வழிகாட்டிக் கோவை என்று அறிமுக்கபடுத்தப்பட்ட நடைமுறைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக கூறினார்.

வாழ்க்கை முன்னர் போல் அல்லாது புதியதொரு வாழ்க்கை முறைக்குள் செல்ல அனைவரும் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்திருந்த அதிபர் ஏமானுவல் மக்ரோன், அனைவரும் இச்சவாலை அமைதியாகவும், தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக மே 11ம் திகதிக்கு பின்னராகவும் முதியோர்கள், பாரிய நோய் உள்ளவர்கள் தொடர்ந்தும் வீடுகளில் இருக்க வேண்டும் நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

சுகாhரப்பணியாளர்களுக்கு நன்றி கூறும் கைதட்டதல்களைத் 20 h 00 மணிக்கு வழங்கிவிட்டு 27 நிமிடங்களுக்கு அமைந்திருந்த அவரது உரையின் முக்கிய விடயங்கள் :

– உணவகங்கள், குடிப்பகங்கள், அருங்காட்சியங்கள், திரையரங்குள், நாடக அரங்குகள் உட்பட பொதுமக்கள் கூடுகின்ற மையங்கள் மறுஅறிவித்தல் வரும் வலை மூடப்பட்டிருக்கும்.

– யூலை நடுப்பகுதி வரை களியாட்ட நிகழ்வுகள், இதர பெருநிகழ்வுகள் யாவும் தடைசெய்யப்படுகின்றன.

– மே 11க்கு பின்னராக சுவாசக்கவசம் கட்டாயமாக்கபடுகின்றது.

– மே 11க்கு பின்னராக வைரஸ் தொற்றுள்ளவர்கள் உரியமுறையில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

– வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்களை சோதனை செய்யும் முறை, வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கப்பட்டு யூன் மாதத்தில் நாளொன்று 1 இலட்சமாக உயர்த்தப்படும்

– பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தொழில்துறைகளுக்கான உதவிகள் மேலும் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுகின்றது.

– பாடசாலைகள் மே 11 முதல் படிமுறையாக திறக்கப்படும்.

வெளிப்படையாக நாடு எதிர்கொள்கின்ற சவாலை நாட்டுமக்களுக்கு தெரிவிப்பதாக குறிப்பிட்ட அதிபர், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உரியவகையில் பொறுப்புடன் கடைப்பிடித்தால் மாத்திரமே பொதுமுடக்கத்தில் இருந்து மீளலாமன்றி, உயிர்களையும் காக்கலாம் என உரிமையோடு எச்சரித்திருந்தார்.

கொரோனா வைரசுக்கு எதிரான களத்தில் முதல்நிலையில் சுகாதாரதப் பணியாளர்களுக்கு தனது முதல்நன்றியினைத் தெரிவிதிருந்த அதிபர், இரண்டாம் நிலையில் நாட்டின் அசைவியக்கத்துகாக பணியில் உள்ள தொழிலாளர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்த அவர், மூன்றாம் நிலையில் வீடுகளில் உள்ளவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

கொடிய உயிர்கொல்லி வைரசான கொரோனா, இன்னும் புரியாத புதிராக இருக்கின்றது என தெரிவித்திருந்த அதிபர், எல்லா நாடுகளும் போதுமான சுகாதார உபகரஙணங்கள இல்லாது நெருக்கடி நிலையினை சந்தித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சுகாதார அவசரநிலையில் பிரான்சின் சுகாதாரநிலையின் பற்றாக்குறையினை இத்தருணத்தில் உணர்ந்து கொண்டதாக தெரிவித்த அவர், அவைகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டது மட்டுமல்லாது, அதன் தேவைகள் பூர்த்தி செய்ய அனைவரும் தேசமாக அணிதிரண்டோம் எனத் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக போர்கால அடிப்படையில் பிரான்சின் சுகாதார உபகரணங்களுக்கான உற்பத்தி நிறுவனங்கள் தமது தயாரிப்புக்களை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக தெரிவித்த அதிபர், சுவாசக்சவசங்கள் உற்பத்தி ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதோடு, 10 செயற்கை சுவாசவழங்கிகள் உற்பத்தி செய்யப்படுவதாகும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நோயாளர்களின் உயிர்களை காக்க தமது நாடுகளில் வைத்து சிகிச்சை அளித்து வரும் லக்சம்பேர்க், ஒஸ்ரியா, ஜேர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளுக்கும் உலக நாடுகளின் தோழமைக்கும் நன்றியைத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை பிரான்சின் தோழமை நாடுகளாகவுள்ள ஆபிரிபிக்காவுக்கு உதவிகளை பலமடங்காக உயர்த்தவுள்ளதாக தெரிவித்த அவர், அவர்களது கடன்கள் நீக்கம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அமைந்திருந்த அதிபரின் உரையில் மே மாதத்துக்க பின்னராகவும் வைரசுடன் வாழ வேண்டிய நிர்பந்த நிலையினை அவர் வெளிப்படையாக குறிப்பிட்டிருப்பதானது, மக்களை அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தலாக கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தினை மருத்துவ உலகம் கண்டறியாத வரையிலும், கொரோனா உலகிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கப் போகின்றது.

இதனை தைரியத்துடனும், அமைதியுடனும் எதிர்கொள்ள வேண்டும் என அவர் கூறியிருப்பதும், மே11க்கு பின்னராக கொரோனாவுக்குள் வாழ்வதற்கான நடைமுறைக்கோவை வெளியிடப்படும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதொன்று.

இழந்த மகிழ்ச்சியினை நாட்டுமக்களுக்கு நிச்சயம் மீட்டுத்தருவேன் என்ற அவரது நம்பிக்கை நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு பிரென்சு தேசம் மட்டுமல்ல உலகமே இன்னுமொரு விடியலுக்காக காத்துக்கொண்டுள்ளது.