“ மே ஒன்றில் மேதினம் “ (மே தினத்திற்கான சிறப்புக்கவி )
மேதினியில் மே ஒன்று
மேன்மையுடன் பூத்ததினம் இன்று
மேலாதிக்க வர்க்கத்தினரின்
மோசமான ஆதிக்கமும்
கொத்தடிமையும் குறைந்த வேதனமும்
வெடித்ததே சிக்காக்கோவில் அன்று
இன்று உலக மேதினமாகி
மேன்மை கொள்ள வைக்கிறதே !
உழைப்பால் உயர்ந்த உன்னதர்களை
உலகத்தின் பசிபோக்கும் உழைப்பாளிகளை
உலக வரைபடத்தையே
வியர்வையால் வரைந்த உணர்வாளர்களை
குருதி கொப்பளிக்க கொதிக்கும் வெய்யிலிலே
செங்குருதி சிந்திய உழைப்பாளிகளை
மே ஒன்றில் நினைத்திடுவோம் !
உழைத்துக் களைத்து
ஓடாய் தேய்ந்து
உள்ளமும் ஒடிந்து
கைகளும் காய்த்து
கனவுகளும் பொய்த்து
கல்லிலும் மண்ணிலும்
கலைநயம் படைத்த
பாட்டாளிகளை பாராட்டுவோம்
பாரெல்லாம் புகழச் செய்வோம் !
உலக மக்கள் உன்னதமாய் வாழ
வியர்வைத் துளிகளைக் காணிக்கையாக்கி
உலகப் படைப்புக்களை உருவாக்கி
உலகத்தையே உழைப்பால் ஓவியமாக்கிய
உன்னத உழைப்பாளர்களை
மேதினியில் நினைத்திடுவோம் மே ஒன்றிலே !
கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A) 01.05.2019
பகிரவும்...