Main Menu

மேட்டுப் பாளையத்தில் பாடகி இசைவாணிக்கு எதிராக ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடல் பாடியதாக பாடகி இசைவாணி மற்றும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் மனு கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாடகி இசைவாணி, இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் உமா சங்கர், தலைவர் செல்வகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார். வாராகி மந்திராலயத்தின் சாக்த ஸ்ரீ வாராகி மணிகண்ட சுவாமிகள், கல்லாறு அகத்தியர் பீடத்தின் சுவாமிகள் சரோஜினி மாதாஜி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஐயப்ப சுவாமி குறித்தும், ஐயப்ப பக்தர்கள் குறித்தும் கொச்சைப்படுத்தும் விதமாக பாடல் பாடிய கானா பாடகி இசைவாணி, அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நீலம் கல்ச்சுரல் கிளப் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பகிரவும்...
0Shares