மெக்ஸிக்கோ எரிபொருள் குழாய் வெடிப்புச் சம்பவம்: உயிரிழப்பு 73ஆக அதிகரிப்பு

மத்திய மெக்ஸிக்கோவில் நிலத்திற்கு அடியில் எரிபொருளை கொண்டுசெல்லும் குழாய்கள் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது.

குழாய்களின் ஊடாக செல்லும் எரிபொருளை சிலர் திருடி கொள்கலன்களில் நிரப்புவதற்கு முயற்சித்தபோது, நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 70இற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

எனினும், இறந்தவர்கள் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளமையால், சடலங்களை அடையாளம் காண்பதில் அவர்களது உறவினர்களுக்கு பாரிய சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்றுள்ள பகுதியில் முகாமிட்டுள்ளவர்கள், தமது உறவுகளை எப்படியாவது கண்டுபிடித்துத் தருமாறு அவர்களது ஒளிப்படங்களை ஏந்தியவாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இன்னும் சிலர் மரபணு பரிசோதனை ஊடாக, உயிரிழந்தவர்களை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். எரிபொருள் குழாய்களின் ஊடாக, கசியும் எரிபொருளை சேகரிப்பதற்காக பொதுமக்கள் கொள்கலன்களை எடுத்துச் செல்லும் காட்சிகள் ஏற்கனவே பதிவாகியிருந்தன.

அந்தவகையில், அவ்வாறு எரிபொருள் கடத்தலில் ஒரு குழுவினர் ஈடுபட்டிருந்தபோதே குழாய் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எரிபொருள் கடத்தலுக்கு எதிரான திட்டங்களை பலப்படுத்தவுள்ளதாக மெக்ஸிகோ ஜனாதிபதி என்ரஸ் மேனுவேல் லுவர்ஸ் தெரிவித்துள்ளார்.

மெக்ஸிக்கோவில் எரிபொருள் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை பதிவாகியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு மாத்திரம் இத்தகைய திருட்டுச் சம்பவங்களால் சுமார் 3 மில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !