மூன்றாவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்றார் ஷேக் ஹசீனா!

பங்களாதேஷின் பிரதமராக ஷேக் ஹசீனா மூன்றாவது முறையாகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் இன்று(திங்கட்கிழமை) பங்களாதேஷ் ஜனாதிபதி Abdul Hamid  முன்னிலையில் டாக்காவிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் மூன்றாவது முறையாகவும் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது அவருடன் இணைந்து 24 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 19 இராஜாங்க அமைச்சர்களும், மூன்று பிரதியமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

குறித்த பதவியேற்பு நிகழ்வில் எதிர்கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வன்முறைகள் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில் பங்களாதேஷ் பொதுத் தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஷேக் ஹசீனாவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் கமால் ஹொசைனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் ஆளும் கட்சி 350 நாடாளுமன்ற ஆசனங்களில் 281 ஆசனங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றிருந்தது. கடந்த தேர்தலில் பெற்ற ஆசனங்களைவிட இது அதிகமாகும்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட கமால் ஹொசைன் வெறும் 7 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியிருந்தார். தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடும் எதிர்த்தரப்பு, இந்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன.

பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கடந்த 2009ஆம் ஆண்டுமுதல் செயற்பட்டு வருகின்றது. முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட குறித்த நாட்டில் காலநிலை மாற்றம், வறுமை மற்றும் ஊழல் மோசடி என பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இதற்கு மத்தியில், மியன்மார் வன்முறையால் பாதிக்கப்பட்ட ரோஹிங்ய அகதிகளுக்கு பங்களாதேஷ் அடைக்கலம் கொடுத்ததால், அந்நாடு உலகளவில் பேசப்பட்டது.

இதேவேளை, பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு சவாலாக காணப்பட்ட முன்னாள் பிரதமர் காலிதா ஷியா, ஊழல் மோசடி குற்றச்சாட்டில் இவ்வருட ஆரம்பத்தில் சிறைதண்டனை பெற்றார். எனினும், இது அரசியல் பழிவாங்கல் என அவர் குறிப்பிட்டிருந்த நிலையில், பிரதமர் ஹசீனா மீண்டும் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !