மும்பை தாக்குதல் ஏற்படுத்திய காயத்தை இந்தியா ஒருநாளும் மறக்காது – மோடி
மும்பை தாக்குதல் ஏற்படுத்திய காயத்தை இந்தியா ஒருநாளும் மறக்காது. அந்தத் தாக்குதலின் விளைவு இந்தியா இன்று புதிய கொள்கைகளை வகுத்து பயங்கரவாதத்தைத் திறம்பட எதிர்கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் மும்பை தாக்குதல் நடைபெறாத வகையில் பாதுகாத்து வரும் வீரர்களுக்கு தலைவணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை தாக்குதலின் 12-வது நினைவு தினத்தை முனிட்டு காணொலி காட்சி வாயிலாக கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “அரசியலமைப்பு தினத்தைக் குறிப்பிட்டு மகாத்மா காந்தியின் உத்வேகம் மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்க வேண்டிய நாள் இது.
இதுபோன்ற பல ஆளுமைகள் இந்தியாவின் வளர்ச்சியின் பாதையை முடிவு செய்துள்ளன. அவர்களின் முயற்சிகளை நினைவில் கொள்வதற்காக அந்த நாளை அரசியலமைப்பு தினமாக கொண்டாட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் மாதம் 26 அன்று முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2008-ல் இதே நாளில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர். வெளிநாட்டவர் நம் நாட்டு மக்கள், அதிகாரிகள், பொலிஸார் எனப் பலரும் உயிர் துறந்தனர்.
மும்பை தாக்குதல் ஏற்படுத்திய காயத்தை இந்தியா ஒருநாளும் மறக்காது. அந்தத் தாக்குதலின் விளைவு இந்தியா இன்று புதிய கொள்கைகளை வகுத்து பயங்கரவாதத்தைத் திறம்பட எதிர்கொள்கிறது. இன்றளவும் நாட்டில் மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற சம்பவம் நடக்காமல் பாதுகாத்து வரும் வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என கூறினார்.
அண்மையில் முடிவடைந்த பீகார் தேர்தல்களைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். மேலும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியாவின் வலுவான தேர்தல் செயல்முறைகளை உலகம் கண்டது. அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்ட வலிமை இதுபோன்ற கடினமான பணிகளை எளிதாக்க உதவுகிறது என்று கூறினார்.
ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது விவாதத்திற்குரிய விஷயமல்ல. இது இந்தியாவின் தேவை” என அவர் தெரிவித்துள்ளார்.