Main Menu

முப்படையினரும் வெகுவிரைவில் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் – சாணக்கியன்!

வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இனி போராட்டத்தில் ஈடுப்பட்டால் இராணுவத்தை கொண்டு போராட்டத்தை அடக்குவேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கை சிவில் பிரஜைகள் தான் இராணுவத்திலும், பாதுகாப்பு தரப்பிலும் சேவையாற்றுகிறார்கள் என்பதை ஜனாதிபதி தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இராணுவத்தினரும் பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். இராணுவத்தை கொண்டு போராட்டத்தை அடக்க வேண்டுமாயின் ஜனாதிபதி இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இராணுவத்தை வரவழைக்க நேரிடும்.

இராணுவத்தினரும் பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள்
வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள். ஆகவே போராட்டத்தை முடக்குவது குறித்து அவதானம் செலுத்துவதை விடுத்து பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண அவதானம் செலுத்துமாறும், அதற்கு கட்சி என்ற ரீதியில் ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டை மாத்திரமல்ல, இராணுவத்தையும் இல்லாதொழித்து சென்றுள்ளார் என இராணுவத்தினர் குறிப்பிடுகிறார்கள்.

கோட்டபய ராஜபக்ஷ கால்வாய், சுத்தப்படுத்துவதற்கும், கட்டடம் அமைப்பதற்கும், வீதி நிர்மாணிப்புக்கும் இராணுவத்தை பயன்படுத்தினார்.

அமுதா கத என்ற விசேட படையணியை உருவாக்கி 40 ஆயிரம் பேரை இணைத்துக்கொண்டு தனது இராணுவ நிலைப்பாட்டை மேம்படுத்தினார்.

இதன்பிறகு விவசாயத்துறை தொடர்பில் படையணியை ஸ்தாபித்து விவசாயத்தையும் முழுமையாக இல்லாதொழித்தார்.

நான் இராணுவத்தை அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை. இன்று இராணுவத்திற்காக வரிந்துக் கொள்பவர்கள் இராணுவத்தின் சம்பளம் தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இராணுவத்தினரது சம்பள அதிகரிப்புக்காக 20 பில்லியன் ரூபா மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகிய எமக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்தவர்களினால் நாடு சீரழிந்துள்ளது. இருப்பதையும் சீரழிக்க வந்துள்ளார்கள். இராணுவத்தினரை விற்று பிழைத்து அரசியல் செய்யும் தரப்பினர் இராணுவத்தினரது சம்பளம் பற்றி கருத்துரைக்கவில்லை.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.