முன்னாள் புலிகள் விக்கி மற்றும் சிவாஜியின் கன்னங்களில் அறைந்துள்ளனர்

சிவில் பாதுகாப்புப் படையின் கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள், கண்ணீருடன் பிரியாவிடை வழங்கி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை கன்னத்தில் அறைந்துள்ளனர் என, ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களது,  இந்த உணர்வுகளுக்கு  தலைவணங்கி,  அவர்கள் இருவரும் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமெனவும், அவர் இன்று (12.06.18)   கொழும்பில் நடைபெற்ற எளிய அமைப்பின்  ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் “தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து நாட்டை மீட்ட இராணுவத்தை சர்வதேசத்துக்கு காட்டிக்கொடுத்து அவர்களை தண்டிக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றது. நாட்டு இராணுவம் இழைக்காத யுத்தக் குற்றவிடயங்களை அடியொட்டி உருவாக்கப்பட்ட 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஒவ்வொன்றாக செயற்படுத்தும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.” எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை “வலிந்து காணாமல் ஆக்கப்படுதலை தடுப்பதற்கான பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்தை உருவாக்கியுள்ளது. எமது நாட்டின் இராணுவத்தை சிறையில் அடைக்கின்றார்கள். அதேபோல் எமது இராணுவத்தை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மௌமான இருப்பது ஏன் என புரியவில்லை.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !