முத்தலாக் சட்டமூலத்தை எதிர்த்தே வாக்களிப்போம்: கனிமொழி உறுதி!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிப்போம் என தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முத்தலாக் சட்டத்தின் மூலம் சிறைத்தண்டனை விதிப்பதை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே வருகிறது. சிவில் சட்டத்தை கிரிமினலாக கொண்டு வருவதை தி.மு.க. நிச்சயம் ஏற்றுக் கொள்ளவில்லை.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முத்தலாக் சட்டமூலத்தை எதிர்த்து நாங்கள் வாக்களிப்போம். இதை தெரிவுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு.

பெண்கள் மீது இவ்வளவு அக்கறை கொண்ட பாரதிய ஜனதா 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான பெண்கள் சட்டமூலத்தை ஏன் கொண்டு வரவில்லை. அது அவர்களின் தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பெண்கள் அதிக அளவில் இல்லை. அதில் முனைப்பு காட்டாமல் இஸ்லாமிய பெண்கள் மீது மட்டும் அக்கறை காட்ட துடிப்பது ஏன்? நிச்சயமாக இது மக்களை பிரித்தாளக் கூடிய ஒரு எண்ணம்” என கனிமொழி மேலும் குறிப்பிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !