முதியவரிடம் சென்று முறைப் பாட்டைப் பெற்றுக் கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி!
முதியவரின் காலடிக்கு வந்து முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்ட ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியின் செயல் பாராட்டப்படுகிறது.
நேற்று (திங்கட்கிழமை) ஏறாவூர் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடளிப்பதற்காக ஒரு முதியவர் தள்ளு முச்சக்கர சைக்கிளில் பொலிஸ் நிலைய வாயிலை அடைந்தார்.
இதன்போது வரவேற்பறையில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அந்த வயோதிபரை விசாரித்தார். முதியவர் தான் பொலிஸ் பொறுப்பதிகாரியை நேரில் சந்தித்தே தனது முறைப்பாட்டைக் கூற வந்தேன் என்று தெரிவித்ததும் பெண் பொலிஸ் அலுவலர் விடயத்தை பொறுப்பதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
இவ்வேளையில் தனது பொறுப்பதிகாரி அலுவலக ஆசனத்தில் இருந்து எழுந்து தள்ளு முச்சக்கர சைக்கிளில் அமர்ந்திருந்த முதியவரின் காலடிக்கு வந்த ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்த அந்த முதியவரிடம் தமிழில் பேசி அவரது முறைப்பாட்டை அவ்விடத்தில் இருந்தே பெற்றுக் கொண்டார்.
முதியவர் அளித்த காணி ஒழுங்கை சம்பந்தமான முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி இதுபற்றி கவனம் செலுத்துவதாகவும் உறுதியளித்தார்.
இந்த விடயம் அநேகரின் அவதானத்தைப் பெற்றதுடன் பலர் பொலிஸ் பொறுப்பதிகாரியின் பணிவான சேவையைப் பாராட்டியும் வருகின்றனர்.