முதல்முறையாக பர்முலா-1 கார்பந்தய வீரரொருவருக்கு கொவிட்-19 தொற்று!
பர்முலா-1 கார்பந்தய வீரர் செர்ஜியோ பெரேஸ், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நடைபெறும் நான்காவது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி பந்தயத்திலிருந்து விலகியுள்ளார்.
முதல்முறையாக பர்முலா-1 கார்பந்தய வீரர் கொரோனாவில் சிக்கி இருந்தாலும் பிரிட்டிஷ் கிராண்ட்பிரி சுற்று திட்டமிட்டபடி நடைபெறும் என்று போட்டி அமைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
30 வயதான மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த செர்ஜியோ பெரேஸ், ரேசிங் பொயிண்ட் அணிக்காக கார் ஓட்டுகிறார்.
மூன்றாவது சுற்று முடிந்ததும் ஹங்கேரியில் இருந்து தனியார் விமானத்தில் மெக்ஸிகோவுக்கு சென்ற செர்ஜியோ பெரேஸ், அங்கு விபத்தில் சிக்கி காயமடைந்த தனது தாயாரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். அங்கே அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
இங்கிலாந்தின் சுகாதார வழிகாட்டுதலின்படி செர்ஜியோ பெரேஸ் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். இதனால் அவர் பிரிட்டிஷ் கிராண்ட்பிரி மட்டுமின்றி அடுத்த வாரம் நடக்கும் 5ஆவது சுற்றிலும் பங்கேற்க முடியாது.
அவருக்கு பதிலாக ஜேர்மனியின் நிகோ ஹல்கென்பெர்க் களம் காணுவார் என்று ரேசிங் பொயிண்ட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தற்போது, தனிமைப்படுத்தப்பட்டுள்ள செர்ஜியோ பெரேசுடன், நெருக்கமாக இருந்த அவரது அணியைச் சேர்ந்த சிலரும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
30 வயதான செர்ஜியோ பெரேஸ் முதல் இரண்டு சுற்றில் 6ஆவது இடத்தையும், 3ஆவது சுற்றில் 7ஆவது இடத்தையும் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.