முதலாம் உலகப் போரில் இறந்த வீரர்களின் சடலங்கள் நல்லடக்கம்!

முதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த நான்கு கனேடிய போர் வீரர்களின் சடலங்கள் பிரான்ஸ் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

பிரான்ஸின் லூஸ் என் கொஹெல்லே நகரிலுள்ள லூஸ் பிரிட்டிஸ் மயானத்தில், குறித்த வீரர்களின் குடும்பங்கள் சூழ இராணுவ மரியாதையுடன் நேற்று (வியாழக்கிழமை) நான்கு வீரர்களது சடலங்களும் நல்லடக்கம் செய்யப்பட்டன.

கடந்த 1917ஆம் ஆண்டு வீர மரணமெய்திய குறித்த போர்வீரர்களின் சடலங்கள் கடந்த 2010, 2011ஆம் ஆண்டுகளில் பிரான்ஸின் வட பிராந்தியத்திலுள்ள லென்ஸ் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் சடலங்கள் அடையாளங்காணப்படாமல் ஏழு வருடங்கள் பிரான்ஸ் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், கனேடிய ஆயுதப் படைப் பிரிவினரால் அண்மையில் இவர்களது சடலங்கள் அடையாளங்காணப்பட்டன. அவை, 16 ஆம், 26ஆம் காலாற்படை பிரிவிலுள்ள வில்ஹெம் டெல், ஹென்றி எட்மோன்ட்ஸ் பிறைடில், ஜோன் ஹென்றி தோமஸ் ஆகிய மூன்று போர் வீரர்கள் மற்றும்  அர்ச்சிபல்ட் வில்சன் என்ற இராணுவத் தலைவர் ஆகியோரது சடலங்கள் என அடையாளம் காணப்பட்டன.

இந்நிலையில், அந்த வீரர்களின் சடலங்கள் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டியது அவசியமென கனேடிய இராணுவத்தின் உயர் தளபதி நிக்கலோஸ் எல் டவுட் குறிப்பிட்டிருந்தார். அதன் பிரகாரம் சடலங்கள் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !