முட்டாள் சிரிப்புகள்

ஒரு ஊரில் முட்டாள் பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். தன் வேலைக்காரனை எப்பொழுதும் சந்தேகத்துடன் விசாரித்து வருவது அவரது வழக்கம். ஒரு நாள் தன் வேலைக்காரனிடம் 500 ரூபாய் கொடுத்து சமையல் செய்வதற்கு தேவையான எண்ணெய்யை வாங்கி வரச் சொன்னார்.

வேலைக்காரனும் கடைவீதிக்குச் சென்று 500 ரூபாய்க்கு பெருமானமுள்ள எண்ணெய் டின் ஒன்றை வாங்கி வந்தான். வேர்த்து விறுவிறுத்து வீட்டிற்குள் நுழைந்த அவனை சந்தேகத்துடன் பார்த்த பணக்காரர், ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய் என்று கேட்டு, எண்ணெய் டின்னை பார்த்தார். எண்ணெய் சிறிது குறைவாக இருந்தது. ஏன் என்று கேட்டார். அதற்கு வேலைக்காரன், டின் அடியில் ஓட்டை இருந்தது அதனால் கீழே வழிந்து விட்டது என்று கூறினான். அதற்கு பணக்காரர், கீழே ஓட்டை என்றால் கீழே தானே குறைந்திருக்க வேண்டும், எப்படி மேலே குறைந்தது என்று கத்தினார்

**********************

கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நடுத்தர வயது இளைஞர் ஒருவர்.

அவர் : மேடம் .. .. இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ? என்று கேட்டார்.

அழகிக்கு கோபம் வந்துவிட்டது.

அழகி : ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு நெனைச்சுட்டீங்க ? நான் எதுக்கு உங்ககூட பேசணும் ? என்றாள் சீற்றத்தோடு.

அவர் : ஸாரி, மேடம் .. .. .. தப்பா நெனைச்சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஒடிவந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காகச் சொன்னேன் – பணிவாகச் சொன்னார் இவர்.

*************************

புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாணவர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக,

ஆசிரியை : இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன்

என்றார். மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார். அதற்கு அந்த மாணவன்,

மாணவன் : இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்.

**************************

இரண்டு துப்பறியும் நிபுணர்கள் காட்டில் தாவர ஆராய்ச்சிக்குப் போனார்கள். ராத்திரி அசந்து தூங்கிக்கொண்டிருந்த ஜூனியரை, சீனியர் தட்டி எழுப்பினார்.

சீனியர் : பையா .. .. வானத்தைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது .. . ?

கண்ணைத் துடைத்து, கோட்டாவி விட்ட ஜூனியர் சொன்னார்

ஜூனியர் : பாஸ் வானத்திலே எத்தனை அற்புதமா நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கு பார்த்தீங்களா ? அது செவ்வாய் கிரகம் .. .. இந்தப் பக்கம் இருக்கிறது வியாழன் .. .. அங்க பாருங்க பளிச்சுனு .. .. அது சனிக்கிரகம் நட்சத்திர அமைப்பை வெச்சு, இப்ப ராத்திரி ஒரு மணி இருக்கும்னு அடிச்சுச் சொல்வேன் .. .. .

ஜூனியர் அடுக்கிக்கொண்டே போக,

சீனியர் : முட்டாளே .. நாம தூங்கிட்டு இருக்கும்போது யாரோ நம்மோட கூடாரத்தைக் கிளப்பிக்கிட்டுப் போயிட்டாங்க .. .. அது உன் மரமண்டைக்குப் புரியலியா .. .. ? என்று சீறினார் சீனியர்.

************************

பரீட்சை நடந்துகொண்டிருந்தது. ஒரு மாணவன் பரீட்சை ஹாலுக்கு அரை மணி நேரம் லேட்டாக வந்து சேர்ந்தான்.

“தம்பி நீ ரொம்ப லேட். இன்னும் இரண்டு மணி நேரத்துல எழுதி முடிச்சுடனும்” என்றார் ஆசிரியர். மாணவன் ஒத்துக்கொண்டான்.

ஆசிரியர் சொன்ன நேரம் வந்தது.

ஆனால் அந்த மாணவன் எழுதிக்கொண்டே இருந்தான். “தம்பி டைம் ஆயிடுச்சு. இனிமே நீ பேப்பர் குடுத்தா வாங்க மாட்டேன்” என்றார் ஆசிரியர்.

மாணவன் எரிச்சலாகி பேப்பரைத் தூக்கி வீசி

“போங்கய்யா நீங்களும் உங்க எக்ஸாமும்!” என்று கத்தினான்.

“டேய் நீ ரொம்ப அதிகமாப் பேசறே! ப்ரின்சிபால் கிட்டே கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்” என்றார் ஆசிரியர்.

“நான் யார் தெரியுமா?” என்றான் மாணவன்.

“நீ யாரா இருந்தா எனக்கென்ன?” என்று கடுப்பாக சொன்னார் ஆசிரியர்.

“நான் யார்னு தெரியாது உங்களுக்கு?” என்றான் மாணவன் மீண்டும்.

“தெரியாது!!!” என்று கத்தினார் ஆசிரியர்.

“அப்ப நல்லதாப் போச்சு!” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான் மாணவன்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !