முடக்கநிலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது 190 எதிர்ப்பாளர்கள் கைது!
மத்திய லண்டனில் முடக்கநிலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது, 190 எதிர்ப்பாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வியாழக்கிழமை சுமார் 19:00 மணிக்கு டிராஃபல்கர் சதுக்கத்தில் அதிகாரிகள் ஒரு பெரிய போராட்டத்தை கலைத்ததாகவும், இந்த எதிர்ப்பு போராட்டங்கள் இரவு முழுவதும் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய கூட்டங்களின் அமைப்பாளர்களுக்கு அபாரதம் விதிக்கப்படலாம் என்ற ரீதியில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு 10,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படுமென மெட் பொலிஸார் தெரிவித்தனர்.
மற்ற 189பேர் புதிய கொவிட்-19 விதிமுறைகளை மீறியதற்காக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு நிலையான அபராத அறிவிப்புகள் வழங்கப்படலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
‘எதிர்ப்பாளர்கள் லண்டனின் ஆரோக்கியத்தையும் எங்கள் அதிகாரிகளையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர்’ என ஸ்கொட்லாந்து யார்ட் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் இரண்டாவது கொவிட்-19 தொற்றலை தீவிரமடைந்ததையடுத்து நாடு முழுவதும் வியாழக்கிழமை முதல் மீண்டும் இரண்டாவது முறையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.
டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ள இந்த பொது முடக்கம் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பகிரவும்...