மீள்குடியேற்ற கொள்கைக்கு என்ன நடந்தது – சத்தியலிங்கம் கேள்வி

முதலமைச்சரிடம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கையளிக்கப்பட்ட வட மாகாணத்திற்கான மீள்குடியேற்றக்கொள்கைக்கு என்ன நடந்தது என மாகாண சபை உறுப்பினர் பா.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற வடமாகாண சபை அமர்விலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘நான் வட மாகாண சபையின் சுகாதார அமைச்சராக பொறுப்பில் இருந்தபோது புனர்வாழ்வு அமைச்சு குறிப்பிட்ட சில காலம் எனது அமைச்சின் கீழ் செயற்பட்ட வேளை வடக்கு மாகாண சபையின் ‘போருக்கு பின்னரான குடிமக்களின் புனர்வாழ்வு செயற்பாடுகளிற்கான கொள்கை வழிகாட்டல்’ ஆவணமொன்று தயாரிக்கப்பட்டது.

இந்த ஆவணமானது 2016ம் ஆண்டு வைகாசி மாதம் 22ம் திகதி பூரணப்படுத்தப்பட்டு அமைச்சர் வாரியத்தின் அனுமதிக்காக என்னால் சமர்பிக்கப்பட்டபோதும், ஆவணம் தொடர்பில் மேலும் ஆராய வேண்டியுள்ளதால் பின்னர் அனுமதிக்காக சமர்ப்பிப்பதாக முதலமைச்சரினால் அறிவிக்கப்பட்டது.

எனினும் துரதிஸ்டவசமாக 02 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்றுவரை ஆவணம் சமர்பிக்கப்படவில்லை.

தற்போது எமது மாகாணத்தில் காணிகள் விடுவித்தல், மீள்குடியேற்றம் மற்றும் காணி அபகரிப்புகள் என பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், எமது மாகாணத்திற்கான புனர்வாழ்வுச் செயற்பாடுக்கான கொள்கை ஆவணமொன்றின் தேவை உணரப்படுகின்றது.

எனவே எம்மால் தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணத்தை சபை மீளாய்வு செய்து சட்ட ரீதியான மாகாணத்தின் புனர்வாழ்வு செயற்பாட்டு கொள்கை ஆவணமாக பிரகடனப்படுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !