“தேவனாக நீங்கள் உருவெடுக்க வேண்டும்”: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு சஜித்துக்கு சிவமோகன் அழைப்பு..!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு அமைச்சரும் ஐக்கியதேசிய கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரேமதாச பல்வேறு மக்கள் வேலைத்திட்டங்களை மக்களிடம் கையளித்திருந்தார் . இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் கலந்துகொண்டிருந்தார் . இந்த நிகழ்வுகளின்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த நாடு மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலை சந்திக்க காத்துக் கொண்டிருக்கின்றது ஏற்கனவே ஒரு ஜனாதிபதித் தேர்தல் மூலம் பாரிய அராஜகங்களை எமது மக்கள் மீது அவிழ்த்துவிட்ட அரசை வீட்டுக்கு அனுப்புவதற்குரிய வேலைகளை நமது தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து முன்னெடுத்தனர். அதேபோல் மீண்டும் இங்கே ஒரு தேர்தல் வர இருக்கின்றது. மீண்டும் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகங்களை மீட்டி பார்க்க எங்கள் மக்கள் இனியும் தயாராக இல்லை. அதுமட்டுமல்ல வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போன்று மீண்டும் ஒரு தடவை இவ்வாறான சம்பவங்களை எம்மக்கள் மீது பரீட்சித்துப்பார்க்க நாங்களும் தயாராக இல்லை. 20க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்க செய்யப்பட்ட அந்த அரசை மீண்டும் ஒரு தடவை பரீட்சித்துப் பார்க்க நாங்கள் தயாராக இல்லை.
ஆனால் கடந்த தேர்தலில் நாம் ஒரு ஜனாதிபதியை கொண்டு வந்தோம் நமது மக்கள் கௌரவமாக வடகிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயகௌரவத்துடன் சொந்த நிலத்தில் வாழ்வதற்கான ஒரு அரசியல் யாப்பு மாற்றத்தை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் ஆனால் அதுவும் நடந்தபாடில்லை. நாளை தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கான ஒரு பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வர இருக்கின்றது. இருக்கின்ற போதிலும் இன்று இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு நான் நிற்கின்றேன்.
எனவே இந்த அரசியல் யாப்பு மாற்றம் நடைபெறுமோ இல்லையோ தெரியாது. ஏற்கனவே நாங்கள் கொண்டு வந்த இந்த ஆட்சியின் மூலம் எமது மக்களின் உரிமைகள் 4 திணைக்களங்களால் உருக்குலைக்கப்பட்டது என்பது வெளிப்படையான உண்மையாகும்.
வீடமைப்பு அதிகார சபை மட்டும்தான் எமது மக்களுக்கான சேவைகளை எமது மக்களுடன் சேர்ந்து சிங்கள மக்களுக்கு சமமாக தமிழர்களுக்காக முஸ்லிம்களுக்காக தமது சேவைகளை வழங்கியது. வனவள பிரிவு அதனுடன் சேர்ந்து வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் மகாவலி அதிகார சபை எமது மக்களின் மீதான அடக்குமுறைகளை விட்டுவிடவில்லை. அதற்கான காரணங்கள் பல இருக்கலாம் ஆனாலும் நாங்கள் இன்று கேட்பது உங்களுடைய பெயராகும். எமது அமைச்சர் சஜித் பிரேமதாச வின் பெயர் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான பெயராக தற்போது பெயரிடப்பட்டு கொண்டிருக்கின்றது.
நிச்சயமாக நீங்கள் வர வேண்டும். அதுமட்டுமல்ல தமிழர்களுக்கான கௌரவமான ஒரு தீர்வில் நீங்கள் கரிசனை காட்ட வேண்டும் என்பதை இந்த மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே நல்லதை நாம் எதிர்பார்க்கிறோமோ அந்த நல்லது நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கரிசனையாகும். 1948ல் இருந்து மீண்டும் மீண்டும் பலரை எதிர்பார்த்து ஏமாந்த தமிழ் இனம் தனது உரிமைக்காகப் போராடிய இந்த தமிழினம் இன்று இறுதியில் ஆயுத மௌனிப்பில் வந்து நிற்கின்றோம்.
இந்த இடத்தில் ஒரு தேவனாக நீங்கள் உருவெடுக்க வேண்டும். தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கு நீங்களாகவே முன்வந்து இந்த உரிமைகளைப் பெற்று தரவோ அல்லது எமது மக்களுடன் இணைந்து இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க நீங்கள் முன்னிற்க வேண்டும் எனக் கேட்டு கொள்கின்றேன் எங்களது ஆதரவு தொடரும் உங்களது செயற்பாடுகளும் எங்களுக்காக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.