மீண்டும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள ஸ்மித்

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், முழங்கை உபாதைக்குள்ளாகியுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) தொடரில் கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். இதற்கிடையில், ஸ்மித்தின் வலது கை முழங்கை பகுதியில் உபாதை ஏற்பட்டதன் காரணமாக அவர் அவுஸ்திரேலியா சென்று, பரிசோதனைகளை மேற்கொண்டார்.

இந்த பரிசோதனைகளின் படி ஸ்மித்தின் முழங்கை தசைநார் பகுதியில் கடுமையான உபாதை ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், ஸ்மித்தின் உபாதையை குணமாக்குவதற்கு, அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சத்திர சிகிச்சையின் பின்னர், அவர் ஆறு வாரங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த உபாதையானது, ஸ்டீவ் ஸ்மித் ஒருவருட தடைக்கு பின்னர், சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த வருடம் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் ஸ்மித் மற்றும் வோர்னருக்கு ஒருவருட போட்டித் தடை விதிக்கப்பட்டதுடன், கெமரூன் பென்கிரொப்டிற்கு 9 மாத தடை வழங்கப்பட்டது. இதில், பென்கிரொப்ட் தடை நீங்கி பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடி வருகின்றார்.

இதன்படி, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரின் தடைக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவுக்கு வருகிறது. எனினும் ஸ்மித் உபாதை காரணமாக தடை நிறைவடைந்தவுடன் அணிக்குள் வருவதில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், உபாதைக்கு முகங்கொடுத்துள்ள ஸ்மித், பாகிஸ்தான் அணிக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர், பாகிஸ்தான் சுப்பர் லீக் மற்றும் மார்ச் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். தொடர் என்பவற்றில் விளையாடுவதும் சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித்தின் உபாதை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் ஊடக பேச்சாளர்,

“ஸ்டீவ் ஸ்மித்தின் முழங்கை தசைநார் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த செவ்வாய்கிழமை (15) அவருக்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதன் பிறகு சுமார் 6 வாரங்கள் ஸ்மித் கை காப்பு பட்டியினை (Brace) அணிந்துக்கொள்ள வேண்டும். குறித்த கை காப்பு பட்டியை நீக்கியதன் பின்னரே ஸ்மித், சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவது குறித்து கருத்து வெளியிட முடியும்” என தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !