மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவது பொதுத்தேர்தல் குறித்து இந்த வாரம் தீர்மானம்.!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியபடி ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு முன்னர் புதிய நாடாளுமன்றத்தை கூட்ட இயலாமையால் எழும் பிரச்சினைகள் குறித்து உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை நாடுவதற்கான முடிவு தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என அறிய முடிகின்றது.
அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத் தேர்தலைத் தீர்மானிப்பது மற்றும் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதா இல்லையா என்பது தொடர்பான அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுவதனால் எனவே அவர் அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் முழுவதும், எதிர்க்கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளிடம் இருந்து நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற அழுத்தம் அரசாங்கத்திற்கு பிரயோகிக்கப்பட்டது.
இந்த விடயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2020 மார்ச் 2 திகதியிட்ட பிரகடனத்தை இரத்து செய்து உடனடியாக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஏப்ரல் 30 க்குப் பின்னர் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் வரை ஜனாதிபதிக்கு நிதி அதிகாரங்கள் இல்லை என்றும் வலியுறுத்தினார்.
இதேவேளை முன்னாள் நிதி அமைச்சர் எரான் விக்ரமரத்னவும் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜனாதிபதி நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி, கோவிட் -19 இனால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை குறைப்பதில் அனைவரின் ஆதரவையும் பெற வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, வேறுபட்ட கருத்தை வெளிப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
இருப்பினும் தேர்தல் அணைக்குழுவால் ஜூன் 1 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த முடியாது, எனவே, அரசியலமைப்பின் பிரகாரம் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றத்தை கூட்டுவது சாத்தியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றம் ஜூன் 1 ஆம் திகதி கூட்டப்பட வேண்டுமானால், பொதுத் தேர்தல் மே 27 அல்லது 28 அன்று நடத்தப்பட வேண்டும் என்றும், தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஏப்ரல் 20 ஆம் திகதி தொடங்கப்பட வேண்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய நேற்று ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
எவ்வாறாயினும், தற்போதைய நிலைமை காரணமாக தேர்தலுக்கு தேவையான முன் ஏற்பாடுகளை ஆணைக்குழுவினால் தொடங்க முடியாது என தெரிவித்த அவர், ஆகவே உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை நாடுமாறும் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.