மீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா

யாருக்குமே பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்ததென, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்படி கூறியுள்ளார்.

கர்நாடகாவில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதாக, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. மீது நம்பிக்கையுள்ளதால் தான், கர்நாடகா மக்கள் பெரும்பான்மையான வாக்குகளை தமக்களித்துள்ளதாக கூறினார்.

அத்தோடு கர்நாடகாவில் அனைத்து உரிமைகளும் பா.ஜ.க.விற்கு உள்ளதென்றும், காங்கிரஸ் கட்சி தோல்வியை கொண்டாடி வருவதாகவும் கூறிய அமித்ஷா சாதி மற்றும் மத அடிப்படையில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள காங்கிரஸ் கட்சி முயற்சித்ததாக குற்றம்சாட்டினார்.

இதேவேளை இருகட்சி கூட்டணி சேர்ந்து பெரும்பான்மையென கூறுவது நியாயமற்றதென்றும், மக்கள் அளித்த வாக்குகளின்படி பெரும்பான்மையை பெற்ற பா.ஜ.க.விற்கே கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் அதிகாரமுள்ளதென்றும் கூறினார்.

மேலும், அவ்வாறில்லையேல் இரு கட்சிகளும் அதிக பெரும்பான்மையை நிரூபிக்க தவறுவதால், மீண்டும் தேர்தலை நடத்துவதே நியாயமானது என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !