மியன்மாரின் செயற்பாடு மன்னிக்க முடியாதது: அமெரிக்கா

ஏழு இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கிய முஸ்லிம்கள் நாட்டைவிட்டு வெளியேறும் அளவிற்கு கட்டவிழ்த்து விடப்பட்ட மியன்மார் இராணுவத்தின் வன்முறை செயற்பாடுகள் மன்னிக்க முடியாததாகும் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆசியான் மாநாட்டின் ஒரு அங்கமாக மியன்மார் தலைவர் ஆங் சான் சூகியுடன் இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இதனை குறிப்பிட்டார்.

மேலும், இலட்சக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மார் இராணுவம் அரங்கேற்றிய வன்முறைகள், அமெரிக்கர்களின் இதயங்களை தொட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அத்துடன், பல்லாயிரக் கணக்கான மக்களின் இடம்பெயர்விற்கும், பலரது உயிரிழப்பிற்கும் காரணமானர்கள் தொடர்பாக பொறுப்புகூறுவதற்கான முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அறிய ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார்.

அமெரிக்க துணை ஜனாதிபதியின் கருத்திற்கு பதிலளித்த மியன்மார் தலைவர், ”நெருக்கடிகள் தொடர்பாக இவ்வாறு இணைந்து செயற்படுவது சிறப்பானதாகும்.

மக்கள் ஒவ்வொருவரும் பல்வேறு கண்ணோட்டங்களை கொண்டுள்ளனர். எனவே, அதனை சரியாக புரிந்துக் கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும்.

நாட்டின் நிலைமை குறித்து விளக்கமளிப்பதற்கான சிறந்த நிலையில் நாம் காணப்படுகின்றோம். இதேவேளை, நாட்டை பாதுகாப்பான மற்றும் வளமான இடமாக மாற்றுவதற்கு எமது செயற்பாடுகளில் உதவுவதற்கு அனைவரையும் வரவேற்கிறோம்” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !