மிக உயரிய விருதான ஞானபீடம் வென்ற கவிஞர் வைரமுத்து
ஒன்றிய முன்னாள் அமைச்சர் டாக்டர் கரண் சிங் இந்த விருதை வழங்கி கௌரவித்தார்.
கடந்த 25 ஆண்டுகளில் தமிழ் மொழிக்குக் கிடைத்த மூன்றாவது ஞானபீட விருது இதுவாகும்.
இந்த நிகழ்வின் போது, விருதைப் பெற்றுக்கொண்டு ஏற்புரை ஆற்றிய கவிஞர் வைரமுத்து, தனது எளிய பின்னணியை விவரித்து உணர்ச்சிகரமாகப் பேசினார்.
வைகை அணை கட்டப்பட்டபோது தனது கிராமமான மெட்டூரிலிருந்து இடம்பெயர்ந்த நினைவுகளைப் பகிர்ந்த அவர், “அன்று கால்சட்டை நனையக் கரைசேர்ந்த அந்தச் சிறுவன், இன்று ஞானபீட மேடையில் நிற்பது தமிழின் பெருமை” என்று குறிப்பிட்டார்.
மேலும், தனக்குக் கிடைத்த இந்த விருது, கவிஞர்கள் மற்றும் இலக்கியப் முன்னோடிகளான திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், பாரதி, கண்ணதாசன் எனத் தான் கற்ற அனைத்து இலக்கிய ஆளுமைகளுக்கும் சமர்ப்பணம் செய்வதாகக் கூறினார்.
“இந்த விருது எனது பயணத்தின் முடிவு அல்ல; மாறாக, இன்னும் வேகத்துடன் செயல்படக் கிடைத்த ஊக்கமாகும்” என்று குறிப்பிட்ட வைரமுத்து, இந்திய இலக்கியம் உலக அளவில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க வேண்டியதன் அவசியத்தையும், இலக்கியத்திற்கெனத் தனிப் பல்கலைக்கழகம் நிறுவப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையையும் முன்வைத்தார்.
