மாயாவதியே அடுத்த பிரதமர் – அகிலேஷ் யாதவ்

மாயாவதியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் வழக்கம்போல் உத்தரப் பிரதேசத்தில் இருந்து தான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். எனவே பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவராக மயாவதியை முன்மொழிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் லக்னோவில் இன்று (சனிக்கிழமை) கூட்டாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். இதன்போது சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 38 தொகுதிகளில் கூட்டணியாக போட்டியிடவுள்ளதாக அறிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அகிலேஷ் யாதவ், “எங்கள் கூட்டணியைப் பொறுத்தவரை சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் இரு கட்சிகளுமே சமமான பலத்துடன் போட்டியிடும். இரு கட்சிகளின் தலைமைக்கும் சமமான மரியாதை அளிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

பிரதமர் வேட்பாளராக எனது விருப்பத்தை கேட்கிறீர்கள். கடந்த காலங்களில் உத்தரப் பிரதேசத்தில் இருந்துதான் பிரதமர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே நிலைமை எதிர்வரும் தேர்தலிலும் தொடரும். பிரதமர் வேட்பாளரை பொறுத்தவரையில் மாயாவதி தான் எனது தேர்வு. அவரையே பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன்” என்று குறிப்பிட்டார்.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக நாடுமுழுவதும் வலிமையான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கு முன்னோட்டமாக, உத்தரபிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் மக்களவை தேர்தலில் கைகோர்த்துள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி 73 இடங்களில் வென்று பெரும் சாதனை படைத்தது. எனவே வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டுமென்றால் வலிமையான கூட்டணி அமைக்க பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் நடவடிக்கை எடுத்துவந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !